உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதே பி.ஆர்.டி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் மட்டும் மருத்துவமனையில் 61 குழந்தைகள் உயிர் இழந்தன.குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாவட்ட மாஜிஸ்திரேட்டு ரவீந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பட்டார். மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் குழந்தைகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலியானது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல மருந்துகள் பற்றாக்குறையும் தான் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து குழந்தைக்களின் மரணம் நிகழ்ந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு மேலும் நெருக்கடியை உருவாகியுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top