அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட புதுவை மாணவர்கள்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் இன்று மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டத்தில் தாகூர் அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, தவளக்குப்பம், வில்லியனூர் அரசு கல்லூரிகள், மோதி லால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் தங்கள் கல்லூரி அமைந்திருந்த பகுதியில் இருந்து ஊர்வலமாக புதுவைக்கு வந்தனர். நகரின் மையப்பகுதிக்கு வந்து ராஜா தியேட்டர் அருகே ஒன்று கூடினார்கள்.

கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கத்தில் நேருவீதி வழியாக ஊர்வலமாக வந்த மாணவர்கள் மாதாகோவில் வீதியில் திரும்பி தலைமை தபால் நிலையம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகையை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் தி.மு.க. மாணவர் அணி, விடுதலை சிறுத்தை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

5 ஆயிரம் பேர் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சட்டசபை, தபால் நிலையம், டெலிபோன் நிலையம் போன்றவற்றுக்கு மக்கள் செல்ல முடியவில்லை.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக வஜ்ரா கலவர தடுப்பு வேன் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. கண்ணீர் புகை குண்டுகளுடன் போலீசார் தயாராக நின்றனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top