வெள்ளத்தில் மிதக்கும் மும்பை, வரலாறு காணாத மழை: மீட்பு பணியில் ராணுவம்

மும்பை:

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழை பெய்தது. நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படும் மும்பை நகரிலும், அதனை சுற்றியுள்ள நவிமும்பை, தானே ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்றன இதனால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மும்பையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். வீடு இடிந்ததில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்தனர். வெள்ளத்தில் மற்றும் கால்வாயில் விழுந்து 2 பெண்கள் பலியானார்கள்.

பலத்த மழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பையின் அனைத்து பகுதியிலும் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வந்த 40 விமானங்கள் ஆமதாபாத், புனே, நாக்பூர் போன்ற பல இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

அனைத்து வசதியும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதே போல் கடற்படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்

மும்பை நகரில் ஒரே நாளில் 29.7 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது வரலாறு காணாத மழையாகும். இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு தான் அங்கு இதே மாதிரி மழை பெய்து இருந்தது.

மும்பை வெள்ளம் தொடர்பாக மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிசுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்தனர்.அப்போது மாநில அரசுகள் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டில் 3 நாட்கள் கொட்டி தீர்த்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டு, பல உயிரிழப்புகளும் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top