எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு

 

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமியை பதவி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சென்னையைச் சேர்ந்த சுஜிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2013 – 2015 வரை மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் கீதாலட்சுமி பதவி வகித்தபோது முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவின் மகன் விவேக்குக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு, 37 அரசு மருத்துவமனைகள், 20 மருத்துவக் கல்லூரிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள ரூ.130 கோடி அளவுக்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாகத்தான் கீதாலட்சுமி தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் மீதான சில குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவரை நீக்கிவிட்டு, புதிதாக துணைவேந்தரை நியமிக்கக்கோரி கடந்த மே மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்ய நாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறைச் செயலர், ஆளுநரின் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வரும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top