தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் செல்போன் நிறுவன அதிபருக்கு சிறை

தென் கொரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் பெண் தலைவர் பார்க் கியுன் ஹை.

 

இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். இவர் அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதில் ஒன்று, பிரசித்தி பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அதிபர் (துணைத்தலைவர்) லீ ஜே யாங் (வயது 49), தனது நிறுவனத்துக்கு தென்கொரிய அரசு சாதகமாக நடந்து கொள்ள சோய் சூன் சில்லுக்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) நிதி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகும்.

 

இந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் லீ கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அவருடன் அவரது நிறுவன மூத்த அதிகாரிகள் 4 பேரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

 

சாம்சங் அதிபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் விழுந்து நிறுவன பொறுப்பை லீ ஏற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

வழக்கு விசாரணையின்போது, லீ குற்றச்சாட்டை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கோர்ட்டு கண்டறிந்தது. இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. அவருடைய நிறுவன மூத்த அதிகாரிகள் 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லீயின் வக்கீல்கள் தெரிவித்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top