பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இன்று சென்னைக்கு வந்து இருக்கிறார்

 

தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவுகள் ஏற்பட்டதால், அரசு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

கடந்த 22–ந் தேதியன்று டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்துள்ள 19 எம்.எல்.ஏ.க்கள், கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக மனு கொடுத்தனர். பின்னர் அன்றே மும்பைக்கு கவர்னர் சென்றுவிட்டார்.

மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) சென்னைக்கு வந்து இருக்கிறார் சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளதா, அதற்கு தற்போது அவசியம் ஏற்பட்டுள்ளதா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுபற்றி விசாரித்தபோது, 27–ந் தேதியன்று பிற்பகலில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75–வது ஆண்டு நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ளது. அதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதால் கவர்னர் வித்யாசாகர் ராவும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரவுள்ளார் என்று கூறப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top