தமிழக அரசு பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவித்ததின் ரகசியம் என்ன?

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக  குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் பல முறை பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளன் தந்தை குயில் தாசன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைக் காண தனது மகனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் விண்ணப்பித்திருந்தார்.

 

அவரது மனு பரிசீலிக்கப்படும் என கடந்த வாரம் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் விடுவிக்கும் உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்தார்

 

அதன்படி ஒருமாத காலம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்படுகிறது. பரோல் தொடர்பான அரசாணை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு இதையடுத்து பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

 

பேரறிவாளன் விடுதலையில் நாம் எதிர்பார்க்கிற விஷயம் வேறு. .எம்ஜியாரின் நூற்றாண்டை முன்னிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் தமிழகத்தின் உரிமையையான 161ன் கீழ் விடுவிக்க வேண்டும் என்பது தான் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

 

சில வாரங்களுக்கு முன்பாக கூட மே 17 இயக்கம் சார்பாக எழுவர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில்   ராஜிவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக தகவல்களை உச்சநீதிமன்றம் கேட்கிறது. அந்த தகவல் பேரறிவாளனை நிரபராதி என்று நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என்பதே உண்மை. உச்சநீதிமன்றம் அந்த வழக்கை திருப்பி எடுப்பதால்  பேரறிவாளனை விசாரணை செய்த அதிகாரிகளின் தற்போதைய வாக்குமூலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் கண்டிப்பாக  பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்.எனக் கூறியது.

 

அதே போல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி நீண்டகாலமாக சிறையில் வாடுபவர்களை விடுவிப்பது வழக்கமான ஒரு நிகழ்வு. எழுவரின் விடுதலை கோரிக்கை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக அண்ணா பிறந்த நாளில் யாரையும் விடுக்கவில்லை.

 

பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மே பதினேழு இயக்கம்  முகநூலில் இது குறித்து

 

‘’இந்த வருடம் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது குறைந்தபட்சம் எந்த நிபந்தனைகளுமின்றி நீண்டகால பரோலில் விடுவிக்கப்படுவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் பேரறிவாளனை மட்டும் ஒரு மாதத்திற்கு அதுவும் வீட்டுக்காவலில் இருக்கும் நிபந்தனைகளோடு அண்ணா பிறந்த நாளுக்கு 20 நாட்களுக்கு முன்பே அரசு பரோலில் விடுவித்துள்ளது.

 

இது எழுவர் விடுதலைக்காக போராடி வரும் தமிழக மக்களை அரசு ஏமாற்றும் செயலாகும்.

 

எம்ஜியார் நூற்றாண்டு என்று இந்த வருடம் அண்ணா பிறந்த நாளில் நீண்டகால சிறைவாசிகள் பலரை விடுவிக்க அரசு முடிவெடுத்திருக்கும் என்றே தெரிகிறது. எழுவரை விடுக்காமல் மற்ற சிறைவாசிகளை விடுவித்தால் கடும் நெருக்கடியை அரசு சந்திக்க நேரிடும் என்பதால் பரோல் என்று அண்ணன் பேரறிவாளனை ஒரு மாதத்திற்கு வீட்டுக்காவலில் வைக்க அரசு முன்கூட்டியே அறிவித்துள்ளது. இதன் மூலம் விடுதலை கேட்கும் நம் அனைவரின் வாயையும் அரசு அடைந்துள்ளது. அண்ணா பிறந்த நாளில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்ட பின்பு பேரறிவாளனை அரசு மீண்டும் சிறையிலடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா செய்யக்கூட தயங்கிய ஒரு காரியத்தை பாஜகவின் நிழழாக செயல்படும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசு செய்துவிட்டதாக பெருமப்பட்டுக்கொள்ளும். பேராறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை நாம் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் பேரறிவாளனுக்கு மட்டும் ஒரு மாத பரோல் என்று அரசு நம்மை ஏமாற்றியுள்ளது என்பதே உண்மை. ஆக பேரறிவாளன் வெளியில் தானே உள்ளார் என்று அமைதியாகவோ அல்லது பரோல் விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக் கொண்டோ இல்லாமல், செப்டம்பர் 15க்குள் நீண்டகால சிறைவாசிகள் உட்பட எழுவரையும் 161ன் கீழ் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடர்ந்து போராடுவோம்’. என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top