இந்திய-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி வெற்றி

இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது.

இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மிலிந்தா சிரிவர்தனா அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து இந்திய அணி களம் இறங்குவதற்கு முன்பே மழை கொட்டியது. இதனால் ஒன்றரை மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 47 ஓவர்களில் 231 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

தொடக்க ஜோடியாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

15 ஓவர்களில் இந்தியா 100 ரன்னை கடந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 45 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். அவரை தொடர்ந்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை.

தனஞ்ஜெயாவின் அடுத்த ஓவர் தான் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். அந்த ஓவரில் கேதர் ஜாதவ் (1 ரன்), கேப்டன் விராட் கோலி (4 ரன்), லோகேஷ் ராகுல் (4 ரன்) மூன்று பேரும் ஒரே மாதிரியாக கிளன் போல்டு ஆகி சொதப்பினர். தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (0), அக்‌ஷர் பட்டேல் (6 ரன்) ஆகியோரும் அவரது சுழல் வலையில் சிக்கி சிதறினர். வெறும் 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி திண்டாடியது.

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்த 23 வயதான தனஞ்ஜெயாவுக்கு இது 4-வது ஒரு நாள் போட்டியாகும். போதிய அனுபவம் இல்லாத அவரது பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தோனியும், புவனேஷ்வர் குமாரும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி இலக்கை எட்டியது. புவனேஷ்வர் குமார் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தார். புவனேஷ்வர் குமார் 53 ரன்னும், தோனி 45 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்த ஜோடி 100 ரன் பார்ட்னட்ஷிப் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

45 வது ஓவரில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை போராடி அடைந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 54 ரன்களும், புவனேஷ்வர் குமார் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top