அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே;ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

ஆதாரைக் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

முன்னதாக, சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன.

 

இத்திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன் தனிநபர் சுதந்திரம் குறித்து எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் 8 நீதிபதிகள் வரை அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இதுகுறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜெ.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், ஆர்.கே.அகர்வால், ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.சாப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகளுமே தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21ன் படி அடிப்படை உரிமையே என ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

 

ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்திவரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.குறிப்பிடத்தக்கது

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top