நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்? – மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு எப்படியும் மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிடும் என்று கூறியது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் சந்திப்பிற்கு பிறகு அதிமுக ஒன்று இணைந்து இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கமுடியாது என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து, நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 31692 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

இதனிடையே, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்து விட்டது என்று கருத்து தெரிவித்தார். மேலும், தரவரிசைப் பட்டியலில் உள்ள சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்ட மாணவர்களின் பட்டியலை தனித்தனியாக இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் தரவரிசை பட்டியலின் விவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், “10 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றாதது ஏன்?. சிபிஎஸ்இ பாடத்திட்ட கேள்விகளை மாநில பாடத்திட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்?” என்று மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “மாணவர்களும், பெற்றோர்களும் விரக்தி அடைந்துள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசை குறை கூற முடியாது. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்களை வடிவமைக்கவும், தேர்வுகளை நடத்தவும் பொதுவான அமைப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top