பொது சிவில் சட்டத்துக்கான மறைமுக முயற்சியாக முத்தலாக் தீர்ப்பை மத்திய அரசு பயன்படுத்துமா?

முத்தலாக் தீர்ப்பு; செய்திக்கட்டுரை

 

 

 

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் 5 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.

 

இந்த 7 மனுக்களையும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோகின்டன் பாலி நாரிமன், உதய் உமேஷ் லலித், அப்துல் நஜீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் சீக்கியர், கிறிஸ்தவர், பார்சி, இந்து, முஸ்லிம் மதங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

 

கடந்த மே 11–ந்தேதி தொடங்கி, வெவ்வேறு நாட்களில் மொத்தம் 7 நாட்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில், சாயிராபானு உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்களின் தரப்பில் வக்கீல்கள் கபில் சிபல், ராம் ஜெத்மலானி, ஆனந்த் குரோவர், சல்மான் குர்ஷித், ஆரிப் முகமது கான், இந்திரா ஜெய்சிங், அமித் சிங் சட்டா, பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

 

மனுதாரர்கள் தரப்பில் இவர்கள், முத்தலாக் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. பெண்களின் அடக்குமுறைக்கு வழிவகுப்பது ஆகும். மேலும் பெண் உரிமைக்கும் எதிரானது. இதனால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்ற வாதங்களை முன்வைத்தனர்.

 

மத்திய அரசு தரப்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராயினர்.

 

மத்திய அரசு தரப்பில், ‘இது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைக்கு இடையில் உள்ள வழக்கு அல்ல. மதத்துக்கு உள்ளே பெண்களின் உரிமைக்கான போராட்டமாகும். ‘முத்தலாக்’குக்கு எதிரான சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. முத்தலாக் என்ற வழக்கம் 1,400 ஆண்டுகளாக ஒடுக்கி வைக்க உதவிய நடைமுறை. முத்தலாக் நடைமுறையை புறமொதுக்கிய நாடுகளிலும், இஸ்லாம் செழித்து வளர்ந்து வருகிறது. நம்முடையது மதச்சார்பற்ற அரசியல் சட்டமாகும். அனைத்து மதங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் அதே வேளையில் அடிப்படை உரிமையையும் பாதுகாக்கவேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த மே 18–ந்தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 

இந்த நிலையில் நேற்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு 395 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

 

5 நீதிபதிகள் அமர்வில், 3 நீதிபதிகள் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஜீர் ஆகிய இருவரும் இது தனிச்சட்டம் தொடர்புடையது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். என்றபோதிலும் 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் அளித்த முத்தலாக் நடைமுறை செல்லாது, அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமைந்தது.

 

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:–

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இந்த தனிச்சட்டத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. 6 மாதங்களுக்கு இந்த முத்தலாக் நடைமுறையை நிறுத்தி வைக்கவேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

 

மேலும் அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் ‌ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும்

இவ்வாறு அவர்கள் தங்களது தீர்ப்பில் கூறி இருந்தனர்.

 

மற்ற 3 நீதிபதிகளான குரியன் ஜோசப், ரோகின்டன் பாலி நாரிமன் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மாறுபட்டு தீர்ப்பு வழங்கினர்.

 

நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், யு.யு.லலித் ஆகியோருடைய தீர்ப்பில், ‘‘முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது இஸ்லாமிய மதத்தில் இல்லை. எனவே முத்தலாக்கை ஏற்றுக்கொள்ள இயலாது. தவிர இது, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 14க்கு எதிரானது. இது அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் அமைந்துள்ளது. அதனால் இது செல்லத்தக்கதும் அல்ல. எனவே முத்தலாக் நடைமுறையை தடை செய்யவேண்டியது அவசியம் ஆகும்’’ என்று கூறியுள்ளனர்.

 

நீதிபதி குரியன் ஜோசப் தனது தீர்ப்பில், ‘‘முத்தலாக் நடைமுறை ‌ஷரியத் சட்டத்துக்கு எதிரானது. திருக்குரானில் கூறப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவே இது தடை செய்யப்பட வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

 

எனவே, பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் அதாவது, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், யு.யு.லலித், குரியன் ஜோசப் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் முத்தலாக் நடைமுறை மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில், “முத்தலாக்கின் மீது சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தீர்ப்பின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சமத்துவம் கிடைத்துள்ளது. மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இது ஒரு பலமான அளவீடு ஆகும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், “முத்தலாக் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. இதில் நீதிக்காக போராடிய பெண்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

காங்கிரசின் மூத்த தலைவரும், பிரபல வக்கீலுமான கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தனிப்பட்ட சட்டங்களை பாதுகாக்கிறது. அதே நேரம் மும்முறை தலாக் கூறும் பழக்கத்தை தடுத்து உள்ளது” என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறும்போது, முத்தலாக்கிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஆக்கப்பூர்வமானதாகவும், முற்போக்கானதாகவும் அமைந்துள்ள இந்த தீர்ப்பு உரிமைக்காக குரல்கொடுப்போர் அனைவராலும் வரவேற்க கூடியதாகும் என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது. இந்த தீர்ப்பில் பெரும்பான்மை, சிறுபான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரத்தை முழுமையாக தெரிந்துகொண்டு பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்டவாரியம் மற்றும் இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் ஆகியவை கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பெண்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றி இது. அதை விட இஸ்லாமிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். எப்போதாவது இதுபோன்ற தீர்ப்பு வரும் என்றே எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டன.

முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்டவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த, பர்ஹா பயஸ், ஷகியா சுமான், நூர்ஜகான் ஆகியோர் கூறுகையில், “மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது. இதனால் பெரிய நிவாரணமும் கிடைத்துள்ளது. எனினும் இது பாதி வெற்றிதான். கோர்ட்டு உத்தரவின்படி சட்டம் இயற்றப்பட்டு அதன் கீழ் தண்டனை வழங்கும்போதுதான் இதில் முழு வெற்றி பெற்றதாக கருத முடியும்” என்றனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி போபால் நகரில் கூடி விரிவாக விவாதிக்கும் என்று அறிவித்து உள்ளது.

 

முத்தலாக் மீது மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் சிறுபான்மையினர் உரிமையில் தலையிடுவதாகும். மேலும் இது பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாகும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

 

மத நம்பிக்கை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தலையிட முடியுமா? முடியும் என்றால் உயர்வு தாழ்வு என பாகுபடுத்தியும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு  எதிராக தீண்டாமையையும் சாதியத்தையும் கொண்ட இந்து மதக்கொள்கையில்  நீதிமன்றம் தலையிடுமா?  என்ற கேள்விக்கு பதில் இல்லை

 

மத நம்பிக்கை தொடர்பான விசயங்களில்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தனிச்சட்டம் என்பது இஸ்லாத்தின் ஓர் அங்கமாகும். முத்தலாக் பிரச்சினை கடந்த 1400 ஆண்டுகளாக நிலவுகிறது. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி தான் இதை சீர்திருத்த முடியும். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி வரவேற்க முடியும் என்று!

 

முஸ்லிம்களில் 6 வகை கொள்கை பிரிவினரில் இருவர்  மட்டும்தான் முத்தலாக்கை கடைசிக்கட்டமாக ஆதரிக்கிறார்கள். விவாகம் ரத்து செய்வதையே இஸ்லாம் ஆதரிப்பதில்லை. இதை கடைசிக்கட்டமாக அமலாக்க தலாக்-எ-எசன், தலாக்-எ-பிதர் என இருவகை விவாகரத்து முறைகள் உள்ளன. இதில் ஒரே சமயத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய இடமில்லை. முஸ்லிம்களின் ஷரீயத் சட்டப்படி முத்தலாக் சட்டவிரோதமானதாக இருப்பினும் அது நடந்தேறி விடுகிறது. என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் சையது காசீம் ரசூல் இலியாஸ் கூறுகிறார்

 

இதற்கு முன் ஷாபானுவின் ஜீவனாம்ச வழக்கில் மத்திய அரசு இயற்றிய சட்டத்தில் பல குறைகள் இருந்தன. இதனால், சட்டம் இயற்றுவதில் இருந்து மத்திய அரசை தவிர்க்கச் செய்வதே எங்கள் நோக்கமாக இருக்கும். ஏனெனில் இதனை சிறுபான்மையினர் உரிமையில் தலையிடும் செயலாகவும், பொது சிவில் சட்டத்தை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சியாகவும் நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

சேவற்கொடியோன் 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top