‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சென்னையில் அனைத்து கட்சி தலைவர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

 

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சென்னையில், நாளை அனைத்து கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும், என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக் கொண்டு, சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது.

தற்காலிகமாக ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து, அந்த குறைந்தபட்ச விதிவிலக்கும் கிடைக்காத அளவிற்கு இன்றைக்கு மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதத்தை முன் வைத்திருக்கும் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மாநில அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறமை படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆகவே ‘நீட்’ தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த மத்திய – மாநில அரசுகளை கண்டித்து 24-ந்தேதி (நாளை) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பங்கேற்கிறார்கள். மாணவர்களும், அனைத்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்று ‘நீட்’ தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், ‘நீட்’ தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் கூறும் போது

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்திய கண்துடைப்பு நாடகம், தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது. ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டம் நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, என்று முதலில் சுப்ரீம் கோர்ட்டில் கூறிவிட்டு, தற்போது மத்திய அரசு அந்தர் பல்டி அடித்திருப்பது மர்மமாக இருக்கிறது.

‘நீட்’ தேர்வு நடத்த மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அதை தடுத்து நிறுத்தி, ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தான். பிறகு, சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று ‘நீட்’ தேர்வே செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த ‘நீட்’ தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தது மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு. அதனை கைகட்டி வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க. அரசு. இந்த துரோகத்தை பெற்றோரும், மாணவர்களும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.என்றார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top