இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன

 

நிறுவனர்கள் தொடர்ந்து  சொல்லிவந்த குற்றச்சாட்டுகளால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்த விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

 

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா இருந்து வருகிறார். மூன்று வருடங்கள் முடிந்து சில நாட்களுக்குள் இவர் ராஜினாமா செய்துள்ளார்.

 

தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக யூ.பி.பிரவீண் ராவ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்படுவார். அதுவரை பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதற்காக நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக விஷால் சிக்கா தொடருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளம் பெற இருப்பதாக சிக்கா தெரிவித்தார்.

 

விஷால் சிக்கா குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருவதால் அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என விஷால் சிக்காவுக்கு ஆதரவாக இயக்குநர் குழு கருத்து தெரிவித்திருக்கிறது.

.

பொதுவெளியில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறும் போது என்னால் சரியாக பணியாற்ற முடியாது. இது கடினமான முடிவாக இருந்தாலும் எடுத்தாக வேண்டும். அமைதியாக, நம்பிக்கையான சூழ்நிலையிலே சிறப்பாக பணியாற்ற முடியும். சூழ்நிலை சரியாக இல்லாத போது நிறுவனத்துக்காக சிறப்பாக பணியாற்ற முடியாது. வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை. அப்படி செய்யும் பட்சத்தில் நம்முடைய கவனம் தொழிலில் இருந்து விலகும்.

 

ஒவ்வொருவரின் காலத்துக்கும் எல்லை இருக்கிறது. அடுத்தவர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் நாம் என்ன நினைக்கிறோம் என்பது நமக்கு தெரியாமல் போய்விடும். நம் உள்ளுணர்வுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருக்கிறார். அதையே நான் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். மூன்று ஆண்டுகள் இங்கு பணிபுரிந்திருக்கிறேன். எந்த வருத்தங்களும் இல்லாமல் நான் வெளியேறுகிறேன் என சிக்கா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையாக சரிந்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 13 சதவீதம் வரை இந்நிறுவன பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 9.56 சதவீதம் சரிந்து 923 ரூபாயில் முடிவடைந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,518 கோடி சரிந்தது

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top