ரேசனில் சர்க்கரைக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் கடிதம்

 

பொது விநியோக திட்டத்தில் ஏழை ,எளிய  மக்களுக்கு கொடுக்கப்படும் சர்க்கரைக்கான மானியத் தொகையை தொடர்ந்து வழங்குவதுடன் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொது விநியோக திட்டத்தில் சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியமான ஒரு கிலோவுக்கு ரூ.18.50 அந்தியோதயா அன்ன யோஜனா (பரம ஏழைகள்) திட்ட பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும், சர்க்கரை அளவு குடும்பத்துக்கு ஒரு கிலோவாக குறைக்கப்படும் என்றும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

 

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னுரிமை பிரிவினர் மிகவும் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகளி்ன் அடிப்படையில்தான் கண்டறியப்பட்டுள்ளனர். மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படாத வண்ணம் முன்னுரிமை பட்டியலில் ஏழைகள் நீக்கப்படும் பட்சத்தில் அது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, அனைத்து முன்னுரிமைப் பிரிவினருக்கும் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்பட வேண்டும்.

 

சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.18.50 மானியம் என்பது 2002-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது வெளிச்சந்தையில் சர்க்கரை விலை ரூ.32 ஆக இருந்தது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை ரூ.13.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் காரணமாக, தமிழக அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது வெளி சந்தையில் சர்க்கரை விலை ரூ.42 அளவுக்கு உயர்ந்துவிட்டது. எனவே கூடுதல் செலவினங்களை (கிலோவுக்கு ரூ.10) தமிழக அரசுதான் ஏற்க வேண்டியுள்ளது. எனவே, சர்க்கரைக்கு 2002-ல் நிர்ணயிக்கப்பட்ட மானியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.28.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அதேபோல், குடும்பத்துக்கு ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பது மிகவும் குறைந்த அளவாகும். காரணம் தமிழகத்தில் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர்கள் இருப்பார்கள். தமிழக அரசு ஒரு நபருக்கு அரைக்கிலோ என்ற அடிப்படையில் ஒரு ரேஷன் அட்டைக்கு அதிகபட்சம் 2 கிலோ என்ற அடிப்படையில் சர்க்கரை வழங்கி வருகிறது.

 

பரம ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை அளவை ஒரு கிலோவாக குறைத்து வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல.

 

தற்போது வழங்கப்படும் அளவுள்ள சர்க்கரை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் இன்றியமையாத பொருட்களில் சர்க்கரையும் ஒன்று. தமிழகத்தின் ஒட்டுமொத்த சர்க்கரை நுகர்வு ஒரு மாதத்துக்கு 35 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் ஆக உள்ளது. சர்க்கரை மீதான கூடுதல் செலவினங்களே ஒட்டுமொத்தமாக தமிழக அரசே ஏற்பதால் அரசின் நிதிநிலையை கடுமையாகப் பாதிக்கும்.

 

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, அனைத்து முன்னுரிமை பிரிவினருக்கும் மானிய விலையில் சர்க்கரை கிடைத்திடவும், தற்போதைய வெளிச்சந்தை விலை ரூ.42-ஐ மனதில்கொண்டு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ரூ.18.50-லிருந்து ரூ.28.50 ஆக உயர்த்தி வழங்கவும் சர்க்கரை அளவு குறைக்கப்படாமல் தொடர்ந்து தற்போதைய அளவில் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top