தலைமைச் செயலாளர் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: 10 லட்சம் அரசு ஊழியர் வேலைநிறுத்தம்

 

திட்டமிட்டப்படி  வரும் 22-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்  என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்

 

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உட்பட பல்வேறு துறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

சென்னையில் கடந்த 5-ம் தேதி பேரணி நடத்தினர். வரும் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்.7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

இந் நிலையில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் பங்கேற்கும் பகுதி நேர, தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.

 

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினருமான எம்.சுப்பிரமணியன் கூறியது:

 

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வரும் 22-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும். இது குறித்து அரசுக்கு முறைப்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் உட்பட மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர்.

தமிழக அரசு தலைமைச் செயலாளர் மிரட்டும் போக்கில் அறிக்கை வெளியிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சங்கத்தினரை அழைத்துப்பேசி கோரிக்கைளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.

 

ஏற்கெனவே எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறை சட்டங்களை எல்லாம் 1988, 2003-ம் ஆண்டுகளில் சந்தித்துத்தான் கோரிக்கைகளை வெற்றி கண்டுள்ளோம். மிரட்டலை கைவிட்டு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

 

ஊதியக்குழு அறிக்கையை திட்டமிட்டே தாமதமாக்குகின்றனர். உறுதியளித்தவாறு 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை வழங்காமல் ஏமாற்றியது அரசுதான். தலைமைச் செயலாளரின் அறிக்கைக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள மேலும் வேகம் பிறந்துள்ளதே உண்மை என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top