அனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?- அன்புமணி கண்டனம்

சுகன்யாவை கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது கண்டிக்கத்தக்கது, அனுபவமும், திறமையும், இல்லாதவர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை செயல்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) அனுபவமும், திறமையும் இல்லாத இளம்பெண் நியமிக்கப் பட்டிருக்கிறார். அதிமுகவில் செல்வாக்கு மிக்கவரின் மகள் என்ற ஒரே தகுதியைக் கொண்டு, எவ்வித முன் அனுபவமும் இல்லாதவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

கோவையில் ரூ.1500 கோடியில் ஸ்மார்ட் நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, கம்பெனி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி நடத்தப்பட்ட நேர்காணலில் சுகன்யா என்பவர் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

28 வயதான சுகன்யா தனியார் கல்லூரிகளில் பொறியியல் பட்டமும்(பி.இ), வணிக நிர்வாகவியலில் (எம்.பி.ஏ) முதுநிலைப்பட்டமும் பெற்றிருக்கிறார். இதைத் தவிர வேறு பணி அனுபவமோ, நிரூபிக்கப்பட்ட செயல்திறனோ அவருக்கு இல்லை. அவரை விட தகுதியானவர்கள் பலர் இருந்தாலும் இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராஜுவின் மகள் என்பது தான். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் அரசியல் வழிகாட்டி இவர்தான் என்பதால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை அவரது மகளுக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஸ்மார்ட் நகரம் அமைக்கும் பணி என்பது எளிதான ஒன்றல்ல. துல்லியமான திட்டமிடல், குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்கும் திறன், ஸ்மார்ட் நகரங்கள் குறித்த அறிவு உள்ளிட்டவை இப்பணிக்கு அவசியமாகும். ஆனால், இவற்றில் எதுவுமே இல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக அரசு நியமிக்கிறது என்றால் ஸ்மார்ட் நகரத் திட்டத்தை எந்தளவுக்கு பொறுப்பற்ற வகையில் ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தலைமை நிர்வாக அதிகாரியாக சுகன்யாவை நியமிக்க மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஆதாரங்களும் உள்ளன.

கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்போர் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; அதில் 5 ஆண்டுகள் நகர்ப்புறத்துறையில் பணி செய்திருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாத ஊதியம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தகுதிகள் சுகன்யாவுக்கு இல்லை என்பதால், தகுதியுடையோர் எவரும் கிடைக்கவில்லை என்று கூறி அந்த ஆள்தேர்வு அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் சுகன்யாவுக்கு பொருந்தும் வகையில் கல்வித்தகுதியாக பொறியியல் பட்டம், வணிக நிர்வாகவியல் முதுநிலைப்பட்டமும், 3 ஆண்டுகள் அனுபவமும் நிர்ணயிக்கப்பட்டன. தொடர்ந்து விண்ணப்பித்திருந்த 21 பேரிடமும் பெயரளவில் நேர்காணல் நடத்தி சுகன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், நெல்லை, திருப்பூர், ஈரோடு உட்பட 12 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படவுள்ளன. சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ் செருபால் என்பவர் நகர்ப்புற போக்குவரத்து போக்குவரத்தில் பல புதுமைகளைப் படைத்தவர். இதற்காக சிட்டி கனெக்ட் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர். 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட இவர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவரும் கூட. இத்தகைய தகுதி கொண்டோர் தான் ஸ்மார்ட் நகரத் திட்டத்தை செயல்படுத்த தகுதியானவர்கள்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, சுகன்யாவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனைத்து விதிகளையும் திருத்தினர். சுகன்யாவுக்கு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே பணி அனுபவம் இருந்தது. அதுவும் வெறும் ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் தான் உதவி மேலாளராக பணியாற்றியுள்ளார். இப்படிப்பட்டவரை ரூ.1500 கோடி ஸ்மார்ட் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தேர்வு செய்திருக்கிறது தமிழக அரசு.

தஞ்சாவூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி போன்ற சிறிய நகரங்களுக்கான ஸ்மார்ட் நகர நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு கூட 15 ஆண்டுகால அனுபவம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விட பெரிய நகரமான கோவை ஸ்மார்ட் நகர நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு 3 ஆண்டு அனுபவம் போதுமானது என்பது மோசடியல்லவா? இதை எப்படி ஏற்க முடியும்?

வழக்கமாக காலுக்கேற்ற வகையில் தான் செருப்புகளை சீரமைப்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் செருப்புக்கு ஏற்ற வகையில் கால்களை வெட்டியிருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில் மட்டும் தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் இத்தகைய முறைகேடுகளைத் தான் பினாமி ஆட்சியாளர்கள் செய்கின்றனர். தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்திருந்த 21 பேரில் தகுதியான வேறு எவரும் இல்லாததால் சுகன்யா தேர்வு செய்யப்பட்டதாக கோவை மாநகராட்சி ஆணையர் அளித்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது.

தகுதியானவர்கள் இல்லாவிட்டால், புதிதாகத் தான் நேர்காணல் நடத்த வேண்டுமே தவிர, இருப்பவரில் ஒருவரை தேர்வு செய்ய முடியாது. சென்னை ஸ்மார்ட் நகர நிறுவனத்துக்கு தலைமை நிதி அதிகாரியை தேர்வு செய்ய நடத்தப்பட்ட நேர்காணலில் தகுதியானவர்கள் யாரும் இல்லாததால் அப்பதவி காலியாக வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரைகுறையானோரை கொண்டு நிரப்பட்டவில்லை.

எனவே, கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுகன்யா நியமிக்கப் பட்டதை அரசு ரத்து செய்ய வேண்டும். மீதமுள்ள ஸ்மார்ட் நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள் நேர்காணலை சமூக ஆர்வலர்களை, பார்வையாளராக நியமித்து வெளிப்படையாக நடத்த வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top