தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம்

 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும், கலந்தாய்வுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வாதாடியது. அத்துடன், குறித்த காலத்திற்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்காவிட்டால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, தமிழக அரசு கொண்டு வர உள்ள நீட் அவசர சட்டம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நேரில் ஆஜராகி விளக்கம தரவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி பிற்பகல் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது தமிழக அரசுக்கு ஆதரவாக பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். நீட் அவசர சட்டம் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவசர சட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

ஆனால், இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

‘தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டது ஏன்? நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தமிழக அரசு ஏன் அவசர சட்டம் கொண்டு வருகிறீர்கள்? என்று கேட்கவில்லை, கடைசி நேரத்தில் ஏன் கொண்டு வருகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம்.

அவசர சட்டத்தால் யார், யாருக்கு நன்மை, பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில் தீர்வு இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க வேண்டும். அத்துடன், வழக்கு விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top