தமிழக அரசை உதைப்பந்து போல் உருட்டி விளையாடுகிறது பா.ஜனதா அரசு; வைகோ

 

 

மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழக அரசை உதைப்பந்து போல உருட்டி விளையாடுகிறது என திருச்சியில் வைகோ பேட்டியளித்துள்ளார்.

 

 

Vaiko

திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு தமிழக அரசை உதைப்பந்து போல உருட்டி விளையாடுகிறது. தமிழகத்தில் இப்போது அபாயமான சூழல்உள்ளது. தமிழகத்தை காங்கிரசும், பா.ஜனதாவும் மாறி மாறி தொடர்ந்து வஞ்சித்து கொண்டேதான் வருகின்றன.

காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே மத்திய அரசு உள்ளது. இது தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தாக்கல் செய்கிறோம் என்று பதில்அளித்தது. ஆனால் 2 முறை பாராளுமன்றம் கூடியும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

ஏற்கனவே தமிழ்நாடு வறட்சியினாலும், காவிரி வறண்டதாலும் பாலைவனமாக மாறி வருகிறது. இந்நிலையில் நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் தமிழக வாழ்வாதாரங்களை அழித்து திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நினைக்கிறது.
தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு உரிமையையும் விட்டு கொடுக்க மாட்டோம்.

ஈழத்தமிழர்கள் தொடர்பான பிரச்சனையில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்த அதே நிலையைத்தான் இப்போதும் கடைபிடிக்கிறோம். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்திய பிறகுதான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்.

தஞ்சையில் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட உள்ளது. இது ம.தி.மு.க.வின் முந்தையை மாநாட்டை காட்டிலும் பிரமாண்டமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top