அழகன்குளம் கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு: இரண்டாயிரம் ஆண்டு பழமையான பொருட்கள் கண்டெடுப்பு

 

201708120033409221_2-thousand-year-old-items-found_SECVPF

 

அழகன்குளத்தில்  தொல்லியல் துறை அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

 

கீழடி போன்று, அழகன்குளம் கிராமத்திலும் நடந்து வரும் தொல்லியல் துறை அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் கிடைத்து வரும் பழங்கால பொருட்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு 3-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

 

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்திலும் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு பணி கடந்த மே மாதம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அழகன்குளம் கிராமத்தில் 52 இடங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

 

இந்த அகழாய்வு பணியின்போது சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலும் அவற்றை நினைவு கூரும் வகையிலும் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருட்கள், ஓடுகள், தானிய சேமிப்பு குடுவைகள், மண்பாண்ட தம்ளர்கள், சங்கு வளையல்கள், பழங்கால நாணயங்கள், யானைத்தந்தத்தால் ஆன அணிகலன்கள், ரோமானிய நாட்டு நாணயங்கள், சங்ககால நாணயங்கள் என 2000-ம் ஆண்டுகளுக்கு முந்திய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

இது பற்றி அழகன்குளம் அகழாய்வு மைய தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது:-

 

அழகன்குளம் கிராமத்தில் 1984-ம் ஆண்டு முதல் இது வரையிலும் 7 முறை அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 8-வது முறையாக அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடத்த தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

 

இந்த அகழாய்வில் சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு சங்ககால மக்கள் அழகன்குளம் கிராமத்தில் வாழ்ந்ததற்கான பல வகையான பொருட்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. குறிப்பாக சங்ககால மக்கள் பயன்படுத்திய சங்கால் ஆன வளையல்கள், கல் மணிகள், சுடுமண் பொம்மைகள், மன்னர் கால தாழிகள், கல்மணி செய்யும் கொதிகலன்கள் உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

 

அப்போதே தமிழர்களுக்கும் ரோமானிய நாட்டிற்கும் இடையே வணிக ரீதியான தொடர்பும் இருந்துள்ளதை பழங்கால நாணயங்கள் மூலம் தெளிவாக அறியமுடிகிறது. இந்த அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top