தமிழக அரசின் 85 சதவீத உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனு; உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

 

IMAGE70429849

மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து ஜூலை 31-ந் தேதி உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.

நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top