டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது முதலமைச்சர் தலைமையில் தீர்மானம்

ttv

டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் அவரது வாழ்க்கையையே அர்ப்பணித்து வளர்க்கப்பட்டு இன்று இந்திய திருநாட்டின் மூன்றாவது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்மை மீளா துயரில் விட்டுவிட்டு 5.12.2016 தேதியில் மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்னும் ஏற்க முடியாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். அதிமுகவின் நிரந்தர செயலாளராக பணியாற்றிய ஜெயலலிதாவின் இடத்தில் வேறு எவரையும் நமது தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்பமாட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக அதிமுக சட்டதிட்டங்கள்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும்வரை நியமிக்கப்பட்டாலும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும் அதிமுகவின் சட்டதிட்ட விதி 20 (5) படி நிரந்தர பொதுச் செயலாளரான ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடி அவரின் வழிகாட்டுதலின்படி கழகத்தையும் ஆட்சியையும் வழிநடத்திவருகிறோம்.

இந்நிலையில் ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.

டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தில் பதில் கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி அவர் கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது.

மேலும் அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின்முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இவைகளுக்கு மாறாக டிடிவி தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் அதிமுகவுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுகவை அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள்

ஒன்றுகூடி வழிநடத்திவரும் நிலையில், வீண் குழப்பங்கள் ஏற்படுத்த தினகரனால் வழங்கப்படும் அறிவிப்புகள் அதிமுக தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது.

தினகரன் அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள் அதிமுகவின் சட்டதிட்ட விதிகளின்படி செல்லக்கூடியவை அல்ல. அதிமுக தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உயரிய லட்சியமான ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் வாய்ப்பு. உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும் என்பதை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றுகூடி அதிமுகவையும் அதன் ஆட்சியையும் வழிநடத்துவோம் என உறுதியற்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top