கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

 

201708061520537481_India-beat-Sri-Lanka-by-an-innings-and-53-runs-in-Colombo_SECVPF

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. புஜாரா (133), ரகானே (132), லோகேஷ் ராகுல் (57), அஸ்வின் (54), சகா (67), ஜடேஜா (70 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 183 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா அதிகபட்சமாக 51 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இலங்கை அணி இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 439 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 7 ரன்னாக இருக்கும்போது தரங்கா உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின், ஜடேஜா பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. எவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் அஸ்வின், ஜடேஜாவை பந்து வீச்சில் இருந்து கோலி மாற்றவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி இருவரும் ரன்கள் குவித்தனர்.

ஒரு வழியாக அஸ்வின், ஜடேஜாவிற்குப் பதிலாக மொகமது ஷமி மற்றும் பாண்டியாவை பந்து வீச அழைத்தார் கோலி. இதற்கு பலன் கிடைத்தது. சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெண்டிஸ், 110 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த கேட்சை சகா அபாரமாக டைவ் அடித்து பிடித்தார்.
அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்னாக இருந்தது. கருணாரத்னே – மெண்டிஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.

 
நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்ததால் இலங்கை அணி முன்னணி பேட்ஸ்மேனை களம் இறக்காமல் புஷ்பகுமாராவை களம் இறக்கியது. கருணாரத்னே – புஷ்பகுமரா ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 92 ரன்னுடனும், புஷ்பகுமாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கருணாரத்னே சதம் அடித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய புஷ்பகுமாரா 16 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சண்டிமலை உடனடியாக ஜடேஜா 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார்.

5-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 136 ரன்னுடனும், மேத்யூஸ் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இலங்கை அணி 137 ரன்கள் பின்தங்கியிருந்தது.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே மேலும் 4 ரன்கள் எடுத்து 141 ரன்னிலும், மேத்யூஸ் மேலும் 8 ரன்கள் எடுத்து 36 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி இன்னிங்சை தோல்வியை நோக்கிச் சென்றது. அடுத்து வந்த பேரேராவையும் வீழ்த்தி ஜடேஜா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து விளையாட டி சில்வா 17 ரன்னிலும், நுவன் பிரதீப் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 31 ரன்னில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழக்க, கடைசி விக்கெட்டாக பிரதீப்பை அஸ்வின் அவுட்டாக்க, இலங்கை அணி 386 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் 70 ரன்கள் அடித்ததுடன், 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top