பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து விலக அறிவிக்கையை ஐ.நா. விடம் வழங்கியது அமெரிக்கா!

 

201708060038371018_United-StatesUN-CouncilCall_SECVPF

 

2015–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12–ந் தேதி பாரீஸ் பருவ நிலை மாற்ற உடன்பாடு, ஏற்படுத்தப்பட்டது. 2016–ம் ஆண்டு, நவம்பர் மாதம் 4–ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 158 நாடுகள் அதை உறுதி செய்துள்ளன.

 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு, ‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமாகியுள்ள பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு வகை செய்கிறது.

 

அதே நேரத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள், பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறவும் பணக்கார நாடுகள் நிதி உதவிகள் செய்யவும் இந்த உடன்பாடு உதவுகிறது.

 

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்ற டிரம்ப் போர்க்கொடி தூக்கினார்.

 

அத்துடன் இந்த உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஜூன் மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இது உலகளாவிய கண்டனங்களுக்கு வழி வகுத்தது.

 

ஆனால் டிரம்ப், ‘‘அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உடன்பாடுதான், இந்த பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு. இது மற்ற நாடுகளுக்கு பலன் தரத்தக்கது. இது அமெரிக்க மக்களுக்கு, வரி செலுத்துவோருக்கு பலன் தராது. அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பை ஏற்படுத்தும். சம்பளத்தை குறைக்கும். தொழில் நிறுவனங்களை மூட வைக்கும். நமது பொருளாதார உற்பத்தியை மிகவும் குறைத்து விடும்’’ என கூறினார். ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இந்த பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு பலன் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

 

இந்த நிலையில், பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து விலகுவதற்கான முறையான அறிவிக்கையை, ஐ.நா. சபையிடம் அமெரிக்கா நேற்று முன்தினம் வழங்கியது. இதை அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலி உறுதி செய்தார்.

 

இது தொடர்பாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியதாவது:–

 

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான முறையான அறிவிக்கையை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) பெற்றுக்கொண்டார்.

 

மீண்டும் சேர முயற்சித்தால் வரவேற்பு

ஆனால், பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேர்வதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டால் அதை பொதுச்செயலாளர் வரவேற்பார்.

 

பருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில், அமெரிக்கா உடன்பாட்டில் தலைவராக தொடருவது முக்கியம். அமெரிக்க அரசு மற்றும் தொடர்புடைய நபர்கள், உலகில் உள்ள அனைத்து தரப்பினரும் நமது குழந்தைகள், எதிர்கால தலைமுறையினருக்கான நிலையான எதிர்காலத்தை கட்டமைக்க ஐ.நா. பொதுச்செயலாளர் முன்னோக்கி எதிர்நோக்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top