சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு!

06CHRGNJACTO-JEO3

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள்   திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்புதான் இந்த போராட்டத்தை நடத்தியது.  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்கள், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் என 70-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸார், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னையில் குவியத் தொடங்கினர். சேப்பாக்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது. ஆர்ப்பாட்டம் குறித்து ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் கூறியதாவது:

 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் சென்னை மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் நீண்ட தூரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 

கடந்த 2 ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பும், அரசு ஊழியர் சங்கம், அரசுப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

 

மத்திய அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஊதிய மாற்றம், படிகள் அமல்படுத்தியதுபோல், தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும். ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 சதவீதம் இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

 

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை நீக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

 

ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், ஏற்கெனவே அறிவித்தபடி, ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும்.

இவ்வாறு ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top