டெல்லியில் தமிழக விவசாயிகள், பேய் முகமூடி அணிந்து ஊர்வலம்

வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-ம் கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது. இதையொட்டி சில விவசாயிகள் தங்களது முகங்களில் பேய் முகமூடி அணிந்து, கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து உரக்க குரல் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சென்றனர்.

இவர்களுடன் புதுச்சேரி மாநில விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் தலைமையில் அந்த மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அங்குள்ள விவசாயிகள் பெற்ற ரூ.20 கோடி கூட்டுறவு கடனை புதுச்சேரி அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தும், கவர்னரின் தலையீட்டால் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை என்று புதுச்சேரி விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது. இதனால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பேயாய் வந்து கோரிக்கைகளை வலியுறுத்துவதாக இன்றைய போராட்டம் அமைந்துள்ளது. எங்களுடன் இணைந்து புதுச்சேரி விவசாயிகளின் கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top