குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு திருமாவளவன் கண்டனம்

குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

குஜராத்தில் பெய்த கனமழையால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டார்.

பனாஸ்காந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் அவர் மக்களை சந்தித்துப் பேசியபோது சிலர் கறுப்பு கொடிகளை காட்டி கோஷமிட்டனர்.

பின்னர் அங்கிருந்து ராகுல் காந்தி காரில் புறப்பட்டார். சிறிது தொலைவில் அவரது காரை குறிவைத்து கற்கள் வீசப்பட்டன. இதில் காரின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக ராகுல் காயமின்றி தப்பினார். அவரது பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்தார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததற்கு குஜராத் முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்; பிரதமர் இந்தத் தாக்குதலை கண்டிக்க முன்வரவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச்சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது பாஜக ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் அவரது காரின் கண்ணாடி உடைந்துள்ளது, அவருடன் சென்ற சிறப்புப் பாதுகாப்புப் படை காவலர் படுகாயம் அடைந்துள்ளார்.

.ராகுல்காந்தியோடு சென்ற வாகனங்கள் பல கல்வீச்சில் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறையைத் தடுக்காதது மட்டுமின்றி ராகுல்காந்தியை ஏளனப்படுத்திப் பேசிவரும் குஜராத் மாநில முதல்வர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

குஜராத் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்வது எதிர்கட்சித் துணைத்தலைவர் என்கிற முறையில் ராகுல்காந்தி கடமையாகும். அந்த அரசியல் கடமையை ஆற்றச்சென்ற ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்புகளை குஜராத் மாநில அரசு செய்து தந்திருக்கவேண்டும். ஆனால், அதற்கு மாறாக ராகுல் குஜராத் மாநிலத்திற்கு வருவதை கேலிசெய்து அந்த மாநில முதல்வரே பேசி வந்ததோடு பாசகவினரை ராகுலுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதன்காரணமாகவே ராகுல் கார்மீது கல்வீச்சு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு குஜராத் மாநில முதல்வர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

வன்முறையை அரசியல் வழிமுறையாக பாஜவினர் கையில் எடுப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவருகிறது. இதை கண்டித்திருக்க இந்திய பிரதமர் நரேந்திரமோடி மவுனம் காப்பது, அவரும் வன்முறையை ஆதரிக்கிறாரோ என்ற அய்யத்தை மக்களிடையே உருவாக்குகிறது. பிரதமர் இந்தத் தாக்குதலை கண்டிக்க முன்வரவேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top