எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

 

madurai high court

கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.178.28 கோடி கல்வி ஊக்கத் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த ச.கருப்பையா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்: கிராமப்புறங்களில் ஏழை குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க மத்திய அரசு தேசிய பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டப்படி மாநகராட்சி, அரசு உதவி பெறும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தப் பணத்தை அந்த மாணவிகள் 18 வயது பூர்த்தியடைந்ததும் எடுக்கலாம்.

 

தமிழகத்தில் 2009- 2010 கல்வி ஆண்டு முதல் 2016-2017 கல்வி ஆண்டு வரை 8 ஆண்டுகளாக இத்திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.178.28 கோடி ஊக்கத்தொகை இதுவரை மாணவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை. இந்த நிதியை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேசிய மாணவிகள் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 2008 முதல் 2017 வரை ரூ.852.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2008 முதல் 2011 வரை பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டின் பயனாளிகள் பட்டியல் விவரங்களை தமிழக அரசு 2017-ல் தான் அனுப்பியது. இதனால் 2011- 2012-ம் ஆண்டில் மாணவிகளுக்கான உதவித்தொகை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வி  செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆக.30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top