ஆதார் அட்டை; அந்தரங்க விபரங்கள் பெறுவது வாழ்வுரிமை மீறலாகுமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

 

suprim

ஆதார் அட்டைக்காக தனிநபர்களின் அந்தரங்க விபரங்களை பெறுவது வாழ்வுரிமை மீறலாகுமா? என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

 

ஆதார் அட்டை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் தொடர்பாக தனிநபர்களின் அந்தரங்கம் பற்றிய தகவல்களை பெறுவது அடிப்படை உரிமை மீறல் ஆகுமா? என்று ஆய்வு செய்வதற்காக 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துவதை தடைசெய்துள்ளது. இப்படிப்பட்ட விவகாரம் தனிநபர் உரிமை மீறலாகும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கடந்த 1950-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் எட்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. தனிநபரின் அந்தரங்கம் தொடர்பான சுதந்திரத்தில் தலையிடுவது அடிப்படை உரிமை மீறல் ஆகாது என எட்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்திருந்தது.
அதேவேளையில், மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக 1960-ம் ஆண்டு வெளியான ஆறு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முந்தைய தீர்ப்புக்கு எதிர்மாறான கருத்தை வெளியிட்டிருந்தது.

 

இந்நிலையில், மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவு தனிமனித அந்தரங்க உரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும், ஆதார் அட்டை திட்டமும், அதை பெறுவதற்கு கையாளப்படும் முறைகளும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக இணைக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்த அமர்வின் முன்னர் மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தனிநபர்களின் அந்தாரங்கத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக முன்னர் 1950-ம் ஆண்டில் 8 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கும், பின்னர் 1960-ம் ஆண்டில் ஆறு நீதிபதிகளை கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் இடையில் மிகுந்த முரண்பாடுகள் உள்ளன. முதலில் இந்த முரண்பாடுகளை களைந்த பின்னர் ஆதார் அட்டை விவகாரம் தொடர்பான விசாரணையை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. இந்நிலையில், தனிநபர்களின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்திருந்த தீர்ப்புகளை தெளிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஒன்பது நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பரிந்துரை செய்திருந்தார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருத்துகளையும், வாதப் பிரதிவாதங்களையும் இந்த அரசியல் சாசன அமர்வு ஆய்வு செய்தது. இதுதொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top