கிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.

 

panner

தேனி மாவட்டம், லெட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் நாளே, சர்ச்சைக்குரிய நிலத்தை முன்னால் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வேறொருவருக்கு  விற்றுவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இதன் அருகே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான தோட்டத்தில் மெகா கிணறு வெட்டப்பட்டது. இதனால், ஊராட்சி கிணற்றில் தண்ணீர் வற்றியது. ஊராட்சியின் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதால், பிரச்சினைக் குரிய கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்கக்கோரி லெட்சுமிபுரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 

இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ‘‘90 நாட்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் நிலத்தை கிராம மக்களே வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வேறு ஒருவருக்கு நிலத்தை விற்று விடுவேன்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கிராமக் குழுவினர் கூறினர்.

 

இதையடுத்து, கிராமக் கூட்டத்தில் நிலத்தை ரூ.6 கோடி கொடுத்து வாங்க முடிவு செய்யப் பட்டது. இந்நிலையில், கிராம கமிட்டியினர் நிலத்தின் ஆவணங்களை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆவணங்களை தர முன்வராததால் சந்தேகமடைந்து நிலத்தின் சர்வே எண்ணில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்றனர்.

opswell (1)

இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 13-ம் தேதி கிராம கமிட்டி குழுவினருடன் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பு, ஜூலை 12-ம் தேதியே, லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு தனது மனைவியின் 40 ஏக்கர் நிலத்தில் உள்ள கிணறு, அதனைச் சுற்றியுள்ள 18.50 சென்ட் இடம் மற்றும் 6 ஏக்கர் 84 சென்ட் நிலம் ஆகியவற்றை ரூ.20 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்று பத்திரம் பதிந்துள்ளது தெரியவந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம கமிட்டியினர், பேச்சுவார்த்தையின் போது 90 நாள் அவகாசம் கொடுத்துவிட்டு, தற்போது உடனடியாக வேறு நபருக்கு எப்படி எழுதி வைக்கலாம் எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து விவாதிக்க நேற்று முன்தினம் ஊர்க்கூட்டம் நடத்தினர்.

 

தற்போது பிரச்சினைக்குரிய கிணறு, இடம் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் உள்ளது. இவரும் கிராம கமிட்டியில் உள்ளார். கிணறு, நிலத்தை வாங்குவதாக இருந்தால், இனி சுப்புராஜிடம் தான் பேச வேண்டிய நிலை கிராம கமிட்டி குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

 

நிலம் வைத்திருப்பவர் கிராம கமிட்டியிலும் இருப்பதால், கிணறு விவகாரம் தற்போது உள்ளூர் பிரச்சினையாகிவிட்டது. சுப்புராஜ் சம்மதித்தால் கிணறு, இடத்தை வாங்க ஊர்மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், அவர் வாங்கிய பிரச்சினைக்குரிய இடத்தை, மீண்டும் விற்கத் தயாரில்லை என்று கூறப்படுகிறது.

 

தன்னை மையப்படுத்தி சுழன்று பெரிதுபடுத்தப்பட்ட கிணறு விவகாரத்தை தற்போது உள்ளூர் பிரச்சினையாக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கிக் கொண்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

 

லெட்சுமிபுரத்தில் நேற்று முன் தினம் ஊர்க்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கிராம கமிட்டியினர், கிராமத்தினருக்கு கிணறு உள்ளிட்ட நிலத்தை விற்பதாக கூறி விட்டு, தற்போது 90 நாட்கள் முடி வதற்குள் வேறு ஒருவருக்கு எப்படி விற்கலாம். முன்னதாக சுப்பு ராஜுக்கு கிணற்றை விற்றுவிட்டு, எதற்காக ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர் என கேள்வி எழுப்பினர்.

 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக கிராம மக்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசினர். இந்தக் கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எட்டப் படாததால், மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என கிராம கமிட்டியினர் கூறினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top