டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்:

விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 14-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வறட்சி நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.21 ஆயிரத்து 208 கோடி கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.1438 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது. அதுவும் அடுத்த ஆண்டுதான் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடனுக்காக விவசாயிகளின் நிலத்தை ஜப்தி செய்கிறார்கள். கடனை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த ஏப்ரல் மாதம் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினோம். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு செல்லுங்கள். நாங்கள் கடனை தள்ளுபடி செய்கிறோம். நிலத்தை ஜப்தி செய்யமாட்டோம் என்றார். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் இதுவரை கடனை தள்ளுபடி செய்யவில்லை. நிலத்தை ஜப்தி செய்வதால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.

இதில் திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி மனமுடைந்து இன்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். இது போன்ற நிலைகளை தடுப்பதற்குத் தான் போராடுகிறோம். ஆனால் எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசி வருவது கண்டிக்கத்தக்கது .

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அய்யாக்கண்ணு திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top