மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

Womens-World-Cup-final-We-panicked-in-the-end-says-Mithali_SECVPF

இந்திய அணி கோப்பையை முதல் முறையாக வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விளையாடி வரலாற்று வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் தவறவிட்டனர்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்தியா 48.4 ஓவர்களில் 219 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 9 ரன்னில் வென்று 4-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றியது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 190 ரன்னில் 3 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடி வந்த பூணம் ரவுத் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 192 ரன்னாக இருந்தது.

அதன்பிறகு தான் விக்கெட்டுகள் மளமள என்று சரிந்து உலகக் கோப்பையை கோட்டைவிட்டது. கடைசி 7 விக்கெட்டுகள் 29 ரன்னில் விழுந்தன.

இந்தியாவின் உலகக் கோப்பை கனவை இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஸ்ருப்சோல் தகர்த்தார். அவர் 6 விக்கெட் கைப்பற்றினார்.

உலகக் கோப்பையை பறிகொடுத்தது குறித்து இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரன் இலக்கை சேசிங் செய்வது என்பது நெருக்கடியானதே. ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். எனது அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இங்கிலாந்து அணியை வீழ்த்துவது என்பது எளிது அல்ல. அவர்கள் எங்களுக்கு கடைசி வரை நெருக்கடி கொடுத்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் நாங்கள் அச்சம் அடைந்துவிட்டோம். இந்த பீதியால் தான் தோற்றோம்.

அதிகமான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கவும், பெண்களுக்கான ஐ.பி.எல்.லை அறிமுகப்படுத்துவதற்கும் இதுவே சரியான நேரமாகும்.

இவ்வாறு மிதாலி ராஜ் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top