கோவையில் பலத்த மழை

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று 3-வது நாளாகவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை குற்றால அருவி, குஞ்சராடி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், மலையில் இருந்து வரும் தண்ணீராலும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

இதன் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணை நிரம்பியது. இதனால் குளங்களுக்கு செல்லும் வகையில் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. அதாவது மொத்தம் உள்ள 50 அடியில் அணையின் நீர்மட்டம் 8½ அடியில் இருந்து 11 அடியாக உயர்ந்தது. இதனால் 3-வது நீரேற்று குழாய் வரை தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.

தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உக்கடம், ராமநாதபுரம், உள்ளிட்ட நகர் பகுதிகளில் இன்றும் 3-வது நாளாக காலையில் சாரல் மழை பெய்தது. மழை காரணமாக கோவை நேரு ஸ்டேடியத்தில் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top