போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ வேண்டுகோள்

 

vaiko2803317f

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை “போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்கள், ஓய்வூதியம், போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வரவு- செலவு வித்தியாசங்களை சரி செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும்.

 

ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ.1700 கோடி, பணியில் உள்ள தொழிலாளர்கள் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை உடனே வழங்க வேண்டும் போன்ற முக்கியமான 7 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் முன்னிலையில், போக்குவரத்துத்துறை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மே 16-ம் நாள் நான் விடுத்த அறிக்கையில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியமான போக்குவரத்துத் துறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் தொழிலாளர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

 

தொழிற்சங்கங்களுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில், தொழிற்சங்க தலைவர்களிடம் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி சுமுகமான முடிவு ஏற்படவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top