தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% ஒதுக்கீட்டு அரசாணை உயர் நீதிமன்ற கிளையிலும் ரத்து

 

maduraih

 

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த மாணவன் சிபி உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

இந்த மனுக்கள் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டார்.

 

ஏற்கெனவே இதேபோன்ற வழக்கில், 85 சதவீத ஒதுக்கீட்டு அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதே அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top