ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா பூங்கா அருகே இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு போராட்டக்குழுவினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, புதுக்கோட்டை மதிகொண்ட அய்யனார் திடலில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.

 இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதி கொண்ட அய்யனார் திடலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று நடந்த போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெண்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், நாஙகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2-வது கட்டமாக 95 நாட்களாக போராடி வருகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று வாய்மொழியாக கூறினார். நாங்கள் வேறு ஒன்றும் கேட்கவில்லை. வாய்மொழியாக கூறிய உறுதிமொழியை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தந்தால் போதும் என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top