மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.    

19988770_1641349739243565_694507238_n

சாதரணமாக கிராமங்களில் ஆடு, மாடு வாங்கி விற்று தொழில் செய்பவர்கள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சந்தையில் 600 ரூபாய் விலையில் 4 ஆட்டுக்குட்டிகளை வாங்கி ஆறு மாத வளர்ப்பில் ஒவ்வொன்றும் 7 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வதை தன் பகுதி நேர தொழிலாகக் கொண்டிருக்கும்  விவசாயக் கூலித்தொழிலாளிகளுக்கும் எதிரானதுதான்  இந்த சட்டம். கிராமப்புற உதிரி தொழிலாளிகளின் பொருளாதரத்தை முடக்கி எளிய மக்களை  மீண்டும், மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடுவதே இந்த சட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

கோவில் திருவிழா,தீபாவளி ,பொங்கல் போன்ற நாட்களில் ஊரில் சிலரை பங்கு சேர்த்துக்கொண்டு ஆடு அறுப்பது என்பது எல்லா கிராமங்களிலும் வழக்கமாக நடக்கும். இனி இதனை செய்பவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களாக அறிவிக்கப்படுவார்கள். கிராமங்களின் ஏரிகளில் குளங்களில் ஆற்றில் மீன் பிடித்து தெருக்களில் விற்பனை செய்வது இனி தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். தற்பொழுது வந்திருக்கும் இந்த சட்டம் மாட்டிறைச்சியைத் தடைசெய்ய அல்ல ;அதன் உற்பத்தியையும்  சந்தையையும் கட்டுப்படுத்தி, கைப்பற்றி பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத்தான்.

மோடி கடந்த நவம்பர் 8 தேதி இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உயர்பண மதிப்பை திரும்பப் பெறுவதன் மூலம் “கருப்பு பணம் ஒழியும்; புதிய இந்தியா பிறக்கும்” என்று! இந்த தேசத்தின் மிக பெரிய தொழில் அதிபர்களும், பல நூறு கோடி கருப்பு பணம் புரளும் கிரிக்கெட் பிரபலங்களும்,  சினிமா பிரபலங்களும், பெரும் அரசியல் தலைவர்களும் இதை ஆதரித்து அறிக்கைகளைக் கொடுத்து கொண்டிருந்த போதே, பயிர்க்கடன் வாங்க வரிசையில் நின்று விவசாயிகள் இறந்து கொண்டிருந்தனர்.

சாலையோரக் கடைகள் முதல் தினசரி சந்தைகள் வரை அனைத்தும் முடங்கி கிடந்தன . அன்றாட தேவைகளுக்கு பணமில்லாமல் சாதாரண உழைக்கும் மக்கள் வங்கிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் . ஆலைகளில் விற்ற பருத்திக்கும், கரும்புக்குமான ரசீதை கையில் வைத்துக் கொண்டு பணம் பெற முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருந்தார்கள் . வங்கிகள் அற்ற கிராமப்புற சிறு குறு விவசாயிகள் தங்கள் உழைப்பு நேரங்களை வங்கியில் வரிசையில் நின்று தொலைத்துக் கொண்டிருந்தபோது தான் , இந்த திட்டம்  கருப்பு பண ஒழிப்பிற்காக அல்ல பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே  என்று அரசு தன் சுய ரூபத்தைக் காட்டத் துவங்கியது.

அரசின் இந்த அறிவிப்புக்கு பின்  டீக்கடையில் இருந்து தள்ளுவண்டி கடைகள் வரை PayTm   போன்ற பணபரிவர்த்தனை நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை துவக்கியிருந்தன.  

இந்த நாடகத்தில் வேலை இழந்த கட்டிடத்தொழிலாளிகள் இன்று வரை மீளவில்லை. கருப்பு பணம் ஒழிப்பு என்ற நாடகத்தின் வழியாக வங்கிகளின் கண்காணிப்புக்குள் வராத, வரி வருவாய் கண்காணிப்புக்குள் வராத சிறு, குறு வணிகங்களை வங்கிகளுக்குள் கொண்டுவந்து சேர்த்து, அதோடு நின்றுவிடாமல் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில்களை எல்லாம் பெருநிறுவனங்களுக்குள் கொண்டு வருவதற்காக முதலில் அந்த தொழில்களை எல்லாம்  அரசின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் ,இந்தியாவில் பால் மற்றும் பால்பொருட்களை வந்து கொட்டுவதற்கு காத்திருக்கும் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா   மற்றும் அமெரிக்கா , ஐரோப்பிய  ஒன்றியத்திற்கு  சந்தையை திறந்து விடுவதற்கும் , உலக பொது வர்த்தக கழகத்தின் (WTO) வழிகாட்டுதலில் தற்போழுது கால்நடை விற்பனை ஒழுங்கு முறை சட்டத்தை கொண்டுவந்துள்ளது இந்த அரசு.

19988736_1641349735910232_1298872622_n

பல்வேறு தேசிய இனங்களும், மதங்களும், வர்க்கங்களும், சாதியுமாய் உள்ள இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி உணவு என்பது உழைக்கும் மக்களின் புரதத்திற்கான  உணவாக இருப்பதால் மாட்டிறைச்சி மீதான ஒழுங்குமுறைச் சட்டம் என்பது இறைச்சி உண்பதற்கு எதிராக இருக்கிறது. இது தனி மனிதனின் உணவு பண்பாட்டிற்கு எதிரான போராட்டமாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது . மேலும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் விவசாயிகள் மீதும் வணிகர்கள் மீதும் மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து மாடு வாங்க சென்ற அரசு அதிகாரிகள் மீதும் கூட இந்து சங்க பரிவாரங்கள் பெரும் தாக்குதலை ஏவி விட்டுள்ளன. இந்த சட்டங்களின் பின்னுள்ள பொருளாதாரக் காரணிகளை நோக்கி நாம் சிந்திக்காமல் திசை திருப்படுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் இந்த தாக்குதல்கள் .கால்நடை வணிக ஒழுங்கு முறை சட்டம் என்பது மாடு வணிகத்தை தடை செய்ய அல்ல, அதை அரசின் வரி கண்காணிப்பிற்குள் கொண்டுவந்து இதனை பெரும் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்க என்பதை இந்த வணிகத்தின் பல்வேறு பிரிவுகளையும் அதன் சந்தை மதிப்பீட்டு அளவுகளையும் பார்க்கிறபோது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் நினைப்பது போல இந்தியாவில் மாட்டு இறைச்சி என்பது விலை குறைந்த பொருள் மட்டும் அல்ல, இந்த துணைக்கண்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% –ம் , நாட்டின் விவசாய உற்பத்தியில் 26% –ம்  கால்நடை சந்தைகளை கொண்டே பெறப்படுகிறது . அதாவது ஆண்டுக்கு 3,40,000 கோடி வருவாய் கொண்ட பெரும் தொழில்துறை இது. விவசாய உற்பத்தியில் உணவு பொருட்கள் உற்பத்தியை விட அதிகளவு பொருளாதார மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் அடுத்த இடங்களில் தான் உணவு பொருட்களும் மற்ற பணப்பயிர்களும் இருக்கின்றன. இந்த மூன்று  லட்சத்து நாற்பதாயிரம் கோடி என்பது அரசின் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் வராத வணிகமாக, இரண்டு விவசாயிகளுக்கு இடையிலான ஒரு கிராமத்தின் தெருமுனைச் சந்தையில் விற்கப்பட்டு நகரத்தின் இறைச்சிக்கடைகள் மூலமாக வாடிக்கையாளரை போய் சேரும் வணிகமாக இருக்கிறது. இப்படி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளின் மூலம்   நடக்கும் வணிகத்தை ஒரு  நிறுவன மயமாக்கப்பட்ட தொழிலாக மாற்றத்தான் இந்த சட்டம்.

கிராமங்களின் நிலமற்ற அல்லது சிறு, குறு விவசாயிகளின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருப்பது கால்நடைத் தொழில்தான். நாட்டின் ஒட்டு மொத்த வேலைவாய்ப்பில் 10 சதவிதம் கால்நடை வளர்ப்பாக இருக்கிறது. ஒரு எருமை என்பது ஆண்டுக்கு 50000 முதல் ஒரு லட்சம் வரை வருமானம் கொடுப்பதாக இருக்கிறது. அதே போல விவசாய அறுவடை தோல்வி அடைகிறபோது சிறு, குறு விவசாயிகளைக் காக்கும் கரமாக கால்நடைகள் இருகின்றன. அதாவது இந்த கால்நடை ஒழுங்குறைச் சட்டம் மாடுகளுக்கு மட்டுமானதாக அறிவிக்கபட்டாலும் எதிர்காலத்தில் ஆடு, செம்மறி, கோழி, மீன் உள்ளிட்டவைகளுக்கும் நீடித்து ஒட்டுமொத்த பால் வணிகம், பால் பொருள் வணிகம் மற்றும் இறைச்சி உள்ளிட்ட கிராமபுற எழைகளின் வாழ்வாதாரத்தை பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான  தயாரிப்பு வேலைகள் தான் இது.

கால்நடை வளர்ப்பு ஒரு பார்வை:

இந்திய கிராமப்புறம் என்பது 90  சதவிதம் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்டது.இந்திய விவசாய உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு தான் அதாவது ஒட்டுமொத்த விவசாயத்தில் 26% சதவீதம்  கால்நடை பொருட்களான பால், பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை மையமாக கொண்டது.    

  வருடம் மொத்த உற்பத்தி விவசாய உற்பத்தி  

 

 கால்நடை  உற்பத்தி
கோடியில் %சதவிதம் கோடியில் சதவிதம்
2011-2012 8195546 986604 12 324013 4.0
2012-2013 9252051 1080421 11.7 361318 4.0
2013-2014 10477140 1233595 11.8 406035 3.9

 

இந்த கால்நடை உற்பத்தியில் குறிப்பாக மாடு மற்றும் எருமை மூலமாக கிடைக்கும் வருமானம் என்பது தேவை அற்ற காளை மாடுகளையும், பால் கொடுக்கும் இந்த கால்நடை உற்பத்தியில் குறிப்பாக மாடு மற்றும் எருமை வளர்ப்பின்  மூலமாக ஈட்டப்படும்  வருமானம் என்பது தேவையற்ற காளை மாடுகளையும், பால் கொடுக்கும் தன்மை அற்ற மாடுகளையும் இறைச்சிக்கு விற்பதினால் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும் ,இது மொத்த வருமானத்தில்  30% முதல் 40% ஆக இருக்கிறது.    மாடு வளர்க்கும் தொழிலின் மிக முக்கிய வருமானமாக இருக்கும் இறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்துவதாக கூறி அதை தடுக்கும் அரசின் திட்டம் என்பது முதன்மையான வருமானத்தைத் தடுப்பது மட்டுமின்றி  வருவாய் தர இயலாத முதிர்ந்த மாடுகளை பேனும் சுமையை விவசாயிகளை ஏற்க செய்வதால் மேலும் அவர்களை நட்டப்படுத்தும் ,வருவாய் அற்ற ஒரு மாட்டிற்கான ஆண்டு செலவு 40 ஆயிரமாக  அளவிடப்பட்டுள்ளது.

19814452_1641349755910230_1283855188_o

1980 ஆம் ஆண்டுக்கு பின் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் வலைபின்னல் என்பது நாடு முழுவதும் 346 மாவட்டங்களில் 1 ,55 ,634 கிராம சங்கங்கள் மூலமாக  15  கோடி விவசாயிகளை பயனாளிகளாக கொண்டு இயங்குகிறது.  இவர்கள்  நாள் ஒன்றுக்கு 650 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறார்கள் பாலுற்பத்தி பண்ணைகளின்  லாபத்தில் 40 %   தேவையற்ற மாடுகளை விற்பது மூலமாக  கிடைக்கிறது .அதை   ஒழுங்குபடுத்துவதாக கூறி தடுப்பது என்பது  இந்த  தொழிலில் இருந்து 15 கோடி குடும்பங்களையும்,  இறைச்சி தொழிலை நம்பியிருக்கும்  22 லட்சம் குடும்பங்களையும் ,  தோல்பொருள் தயாரிப்பில் இருக்கும்  பல லட்சம் மக்களையும் அதிலிருந்து  வெளியேற்றும் சதி. ஆங்கில ஆட்சி காலத்தில் 1876 முதல் 1901 வரையான காலகட்டத்தில் மட்டும் ஆங்கில அரசின் வரி தீவிரவாதத்தால் 3  மிகப்பெரிய  பஞ்சத்தை இந்த இந்திய ஒன்றியம்   சந்தித்துள்ளது 1976 முதல் 78 வரையிலான  சென்னை பஞ்சம் என்று பெயரிடப்பட்ட பஞ்சத்தில் மட்டும் 55  லட்சம் மக்கள் இறந்து போயிள்ளதாக  அவர்களே  பதிவு செய்துள்ளார்கள் . அப்படிப்பட்ட ஒரு சூழலை நோக்கி தான் நம்மை இந்த அரசு அழைத்து செல்லுகிறது .

    இந்தியாவில் பல்வேறு தொழில்துறைகள் வளர்ந்திருப்பது போலவே, கால்நடைகளின் எண்ணிக்கையும் , கால்நடை வளர்ப்பும் அதன் துணை தொழில்களும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1992ஆம் ஆண்டு 470.9 மில்லியனாக இருந்த கால்நடை எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டு 512.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டு 78.3 மில்லியன் டன்னாக இருந்த பால்பொருள் உற்பத்தி, 2016ஆம் ஆண்டு 155.5 மில்லியன் டன்னாக உயர்ந்து இருக்கிறது.  2020 ஆண்டு   தோல்பொருட்களின் உற்பத்தி 27 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என மோடி அரசு திட்டமிட்டுள்ளது. உலகின் மொத்த தோல் உற்பத்தியில் 12 சதவிதமும் காலனி உற்பத்தியில் 9% இந்தியாவில் நடைபெறுகிறது .   

கால்நடை எண்ணிக்கை:                

இனம் அளவு(மில்லியனில்)
மாடு 199.9
எருமை 76.7
செம்மரி 65.1
வெள்ளாடு 132.5

                                                              

கால்நடை பொருளாதாரம் :

கால்நடை பொருளாதாரத்தின் முக்கிய பங்காக இருப்பது இறைச்சி மற்றும் தோல், பால் பொருட்கள் உற்பத்தியாக இருக்கின்றது. இந்தியாவின் இறைச்சி உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டில் 59.5லட்சம் டன்னாக இருந்தது. இதில் அரசின் கண்காணிப்பில் நிறுவனங்களால் நடத்தப்படும் கோழிப்பண்ணை இறைச்சி 26.8லட்சம் டன் மட்டுமே விவசாயிகளால் வளர்க்கபடும் மாட்டிறைச்சி 14.3 லட்சம் டன், ஆட்டிறைச்சி 13.8 லட்சம் டன், பன்றி இறைச்சி 4.4 லட்சம் டன். 2014-15ஆம் ஆண்டில் 32.5 லட்சம் டன் உற்பத்தி என்பது நிறுவங்னங்கள் அல்லாத சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. 2012-13  -ல்  59.5 லட்சம் டன்னாக இருந்த இறைச்சி உற்பத்தி 2016ஆம் ஆண்டு 73.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல்  ஆண்டுக்கு 90.4 லட்சம் டன் மீன் இறைச்சி இந்தியாவில் கிடைக்கிறது. 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் பொருட்களின் உற்பத்தி 155.5 மில்லியன் டன் என்கிறது இந்திய அரசின் புள்ளியியல் துறை  தகவல்.

20067662_1641349742576898_82472516_n

 

மோடி அரசின் புதிய ஒழுங்குமுறைச் சட்டம் என்பது பல கோடி எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த மிகப்பெரிய கால்நடை வளர்ப்பு  தொழில் சந்தையை ஒரு சில நிறுவனங்களின் உடைமையாக்கி, கோழிப் பண்ணைகளைப் போல பெரும் நிறுவனங்களே மாட்டு பண்ணைகளையும், ஆட்டுப்பண்ணைகளையும் நடத்தும். அவர்களே இறைச்சிக் கடைகளையும் நடத்துவார்கள்; ஏற்றுமதியும் செய்வார்கள். இவ்வாறு நடக்கும்பட்சத்தில்  நான்கு மாடுகளையோ அல்லது பத்து ஆடுகளையோ  வளர்த்து  வாழ்பவர்களும் ,சிறு கிராமங்கள் முதல் பெருநகரங்களின் தெருமுனைகளில் இறைச்சிக்கடை நடத்துபவர்களும் எந்த வாய்ப்புமற்று அந்த தொழிலிலிருந்து  வெளியியேற்றப்படுவார்கள்.

இனி ஆடு ,மாடு வாங்குவதற்கு  பொதுத்துறை வங்கிகளும் ,கூட்டுறவு சங்கங்களும் கொடுக்கும் மானியக் கடன்கள் முழுமையாக நிறுத்தபடும். ஏனெனில் இனி ஆடு, மாடு வளர்ப்பதற்கும், வெட்டுவதற்கும், விற்ப்பதற்கும்  அம்பானிகளும், அதானிகளும் வருவார்கள். இது ஏதோ கிராமத்து விவசாயிகளுக்கும் கறிக்கடை நடத்துபவருக்குமான வாழ்வாதார பிரச்சனை என்று நாம் கடந்து விட முடியாது. ஏனென்றால் பால் பொருளுக்கும்,   பதப்படுத்தபட்ட  இறைச்சிக்கும் 12 முதல் 18 சதவித வரியை ஜி எஸ் டி மசோதா மூலம் கொண்டு வந்துருக்கிறார்கள். நீங்கள் வாங்கும் மீன், பால், இறைச்சியின் விலையில் 18 சதவிதத்தை கூட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பன்னீர்பெருமாள்                                                                                            

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top