மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை ரத்து உயர் நீதி மன்றம் உத்தரவு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய அகில இந்திய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மாதம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன.

2

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்யும் போது மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை கடந்த மாதம் 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதற்கு மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் தரணிஷ்குமார், சென்னை மாணவர் சாய் குமார் உள்பட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், ‘மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு அதில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்காக 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும்.

மேலும் உள்ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கும் இந்த உள்ஒதுக்கீடு எதிராக உள்ளது. எனவே இந்த உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். அதன் பேரில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர்தான் எழுதியுள்ளனர். நீட் தேர்வு மத்திய அரசு பாடத்தின்படிதான் நடத்தப்பட்டது.

இதில் உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் அது மாநில பாட திட்டத்தில் படித்தவர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

மேலும் தமிழக அரசுக்கு கொள்கை ரீதியில் இத்தகைய முடிவை எடுப்பதற்கு அனைத்து அதிகாரமும் உள்ளன. இதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக்கொண்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ரவிச்சந்திர பாபு வெளியிட்டார்.

அவர் தனது தீர்ப்பில், “மருத்துவ சேர்க்கைக்கு தமிழக அரசு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகையால் தமிழக அரசின் அரசாரணையை ரத்து செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புதிய தர வரிசையை பட்டியலை தயாரித்து கலந்தாய்வு நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே 17-ந்தேதி கலந்தாய்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கலந்தாய்வு மேலும் தாமதமாகும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐகோர்ட்டு தீர்ப்பு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top