கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை-மத்திய அரசு அழுத்தம்

 

 

court

தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டுகளுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு மாற்றி அளித்து உள்ளது சுப்ரீம் கோர்ட்டு

 

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள யோசனை குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது.

 

.இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்,

 

கீழ்க்கோர்ட்டுகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை என்ற புதிய நடைமுறை மூலம் நீதிபதிகளை நியமிப்பது பற்றி உத்தேசித்து வருவதாக கடிதம் அனுப்பியது.

 

இந்த கடிதம் கிடைத்ததும் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து, இதை ஒரு வழக்காக பதிவு செய்து, இது குறித்து விசாரிப்பதற்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமித்தது.

 

 

கடந்த மே 9–ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின் போது, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதுவரை 3 மாநிலங்கள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், 21 ஐகோர்ட்டுகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

 

காஷ்மீர், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுகள் சிறிது கால அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்த அவர், குஜராத், கேரளா, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டுகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், மையப்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்யும் நோக்கில் மட்டுமே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மாநிலங்களில் தற்போது உள்ள வழிமுறைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும், இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கையிலும் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

 

வருங்காலங்களில் கீழ்க்கோர்ட்டுகளில் நீதிபதிகளின் நியமனம் சீரான முறையில் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கே மையப்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறையை அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.

 

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 28–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top