ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜவுளி நிறுவனங்கள் 5- ஆவது நாளாகப் போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் 5- ஆவது நாளாக ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூலை 6- ஆம் தேதி முதல் ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், பெருந்துறை, விஜயமங்கலம், திருச்செங்கோடு, பவானி, சென்னிமலை, நத்தக்காடையூர், லக்காபுரம், சித்தோடு, வீரப்பன்சத்திரம், சூளை போன்ற பகுதிகளில் இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள், பிளீச்சிங், காலண்டரிங், டையிங் பட்டறைகளும், விசைத்தறிக்கூடங்களும் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதுதவிர ஈரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, எம்.எம்.எஸ். காம்பவுன்ட், பிருந்தா வீதி, ராமசாமி வீதி, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு, திருநகர் காலனி, கருங்கல்பாளையம் என ஈரோட்டில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை ஜவுளி விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஜூன் 6 முதல் 11- ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு கடையடைப்பு, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளி நிறுவனங்கள், விற்பனை, உற்பத்தி நிறுவனங்கள் மூலம் தினமும் ரூ. 30 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

5- ஆவது நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்டவற்றில் மனித சங்கிலிப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு தலைமை வகித்த ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் (எக்மா) தலைவர் ரவிசந்திரன் கூறியதாவது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சிறு, குறு ஜவுளி வணிகர்களுக்கு ரூ. 20 லட்சம் வரையிலும் வரி விலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். மாதம் 3 முறை கணக்குத் தாக்கல் செய்யவும், இப்போதைக்கு 2 மாதங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் கணக்கு வழக்கைப் பராமரிக்கலாம் என்றும், 2 மாதங்களுக்குப் பிறகு கட்டாயம் ஜி.எஸ்.டி. பில் கணினி மூலம் வழங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதேபோல, தற்போது ரூ. 75 லட்சம் வரை வர்த்தகம் செய்து வரும் வணிகர்கள் 1 % அல்லது 2 % காம்போசிட் வரி செலுத்துபவர்கள் இனி 5% வரியுடன் மேலும் 1 % வரியை சேர்த்து இனி 6 % வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஜவுளி வர்த்தகம் புரிபவர்கள் பெரும் சிரமத்தையும், சிக்கலையும் சந்திக்க நேரிடுகிறது.

மேலும், செயற்கை இழைகள் மீது 18% ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது தவறானது. ஏற்கெனவே அந்த செயற்கை இழை துணிகள் மீது 5 % வரியும், அதை நூலாக உற்பத்தி செய்யும் ஆலைகள் நெசவு செய்யும்போது 18 % வரியும் விதிக்கப்படுவதால் உற்பத்தி செய்யும் ஆலைக்கு அவை சேமிப்பாகக் கருதப்படும். எனவே, நூல் வாங்கி நெசவு செய்து விற்பனை செய்யும்போது உள்ளீட்டு வரவு 13 % அனுமதிக்கப்படாத காரணத்தால் இந்த சட்டம் ஆலைகளுக்குத்தான் சாதகமாக இருக்கும்.

சாதாரண சலவைக்குப் பயன்படுத்தும் சலவைத் தண்ணீர் (பிளீச்சிங்) மீது 0 % ஆக இருந்த வரி தற்போது 18 % ஆக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பையும் கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். பனியன் கழிவுகளில் இருந்தும், கைத்தறியில் நெய்யப்படும் கால் மிதியடிகளுக்கும் 12 % ஜி.எஸ்.டி. என்பது மிகவும் பின்தங்கிய அந்தியூர், பவானி, பருவாச்சி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, மத்திய அரசு கருணையோடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய முன்வர வேண்டும் என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top