கதிராமங்கலத்தில் 10-வது நாளாக கடையடைப்பு: அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு

 

kathi-shop

 

கதிராமங்கலத்தில் இன்று 10-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.

போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் இன்று 10-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வேன், ஆட்டோக்களும் ஓடவில்லை.

கதிராமங்கலத்தில் இன்று (திங்கட்கிழமை) அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளனர்.

இதற்காக போராட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. கதிராமங்கலம் மணல் மேட்டு தெரு,வெள்ளாளத் தெரு, கருப்பட்டி தெரு, நருவெளி, பெரிய, சின்ன சாலியத் தெரு, பெருமாள் கோவில் அக்ரஹாரம், பூம்புகார் சாலை, சின்னகடை தெரு, ஆகிய தெருக்களில் இருந்து முக்கிய பிரமுகர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வெளியில் இருந்து வரும் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். உண்மை நிலவரத்தை வெளி உலகுக்கு எடுத்து கூற இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

கதிராமங்கலம் மக்களிடம் இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்களை கேட்கிறார்கள். இதற்காக சிவராமபுரத்தில் இருந்து ஊர்வலமாக செல்லும் அவர்கள் அய்யனார் கோவிலில் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்கிறார்கள்.

இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்,விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், மற்றும் தி.மு.க., த.மா.கா நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

இதனால் கதிராமங்கலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top