பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல; லாலு பிரசாத் யாதவ்

 

lalu_prasadh

பாட்னாவில் நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 21-வது ஆண்டு விழா நடந்தது. அதில்   பங்கேற்ற பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சிறப்புரையாற்றினார். அப்போது தற்போது நடைபெற்று வரும் இந்திய அரசியலை கடுமையாக லாலு பிரசாத் விமர்சித்தார்.

 

பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் தலித் வகுப்பை சேர்ந்தவர் இல்லை என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்தார்

 

ஜனாதிபதி தேர்தல் வருகிற 17ம் தேதி நடக்கிறது. ஆளும் பாஜக சார்பில் பீகார் கவர்னராக பணியாற்றிய ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில் அதே வகுப்பைச் சேர்ந்த மீராகுமார் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என்று ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது

 

“பாஜக வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் கோலி சமூகத்தை சேர்ந்தவர். உத்தரபிரதேசத்தில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவு.

 

கோலி சமூகத்தினர் குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். எனவே, தலித் சமூகத்தவர் என்று கூறப்படும் ராம்நாத் கோவிந்த் ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்.

 

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் பீகாரின் மகள். அவரை வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

 

பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும். நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களும், ஊடகங்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன.

ஆகஸ்டு 27ம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பேரணியை நடத்த இருக்கிறேன். இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை ஒன்று இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கட்சியும் ஒரு குடையின் கீழ் வந்தால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோல்வி அடைய செய்ய முடியும்.” என்று கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top