தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

மத்திய அரசு மதவாத சாதி பிரச்சனை மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. தமிழகத்துக்கு நீட் நுழைவுத் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மான நகல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதிஉதவி மற்றும் வரி சலுகைகளை வாரி வழங்குகிறது.

விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. விவசாய பொருட்களுக்கு நல்ல கட்டுப்படியாகின்ற விலையை மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. காவிரி, பாலாறு பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராகவும், ஆந்திரா, கர்நாடகாவுக்கு ஆதரவான போக்கையும் கடைபிடிக்கிறது.

தமிழ்நாட்டில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மாநிலத்தின் உரிமைகள் குறித்து கவலைப்படாமல், பதவியை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற நிலையில் செயல்பட்டு வருகிறது.

மாநில அரசு மத்திய அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக இருக்கிறது. தமிழகத்தில் தற்போது செயலற்ற ஆட்சியே நடக்கிறது. விழுப்புரம் பெரிய மாவட்டமாக உள்ளது. அதனால் விழுப்புரத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top