திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண்ணை தாக்கி கன்னத்தில் அறைந்த திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு ஈரோடு அதிரடிப்படை எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நல வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், சாமாளாபுரத்தில் கடந்த ஏப்ரல்11ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடினர். அப்போது, அப்போராட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸார் போராடிய பெண்கள் மீதும், பொதுமக்களின் மீதும் தடியடி தாக்குதல் நிகழ்த்தினர். இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயம் அடைந்தனர்.
ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணில் கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதனால், அப்பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈஸ்வரியைத்தாக்கி, செவித்திறனை குறைத்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி,தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும்,மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.
ஆனால், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.குறைந்தபட்சமாக துறை ரீரிதியான நடவடிக்கை கூட எடுக்கவில்லை
இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை, பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்தது. இந்தப் பட்டியலில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெயரும் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மதுவிலக்கு கூடுதல் எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தண்டிக்க படவேண்டியவருக்கு பதவி உயர்வு கொடுத்து மக்கள் விரோதமாக நடந்துகொள்கிறது தமிழக அரசு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பாண்டியராஜனின் பதவி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண்களை தாக்கியவருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.