முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி முதன்முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.
மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் விழுத்தி வெற்றி பெற்றது பாக்கிஸ்தான் அணி.

pakistan-7594

நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அசார் அலி, பஹர் ஸமான் இந்திய பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீராக ரன் சேர்த்தனர்.புவனேஷ்வர் குமார் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசினார். 10 ஓவர்களில் பாகிஸ்தான் 56 ரன்கள் சேர்த்தது.

ஜடேஜா வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் பஹர் ஸமான் பவுண்டரியால் பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது.சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு பஹர் ஸமானுடன் இணைந்து அசார் அலி 128 ரன்கள் சேர்த்து இருந்த இந்த ஜோடி 23-வது ஓவரின் கடைசி பந்தில் அசார் அலி 59 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா – தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதையடுத்து பாபர் அஸாம் களமிறங்கினார்.அதிரடியாக விளையாடிய பஹர் ஸமான் 92 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை அடித்தார். இவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 33 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. இந்த இரண்டும் ஜோடிக்களும் இந்தியாவின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.பாகிஸ்தான் அணியின் ரன் விகிதம் உயர்ந்தது.

சிறப்பாக விளையாடி வந்த பஹர் ஸமான் 106 பந்துகளில், 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பாபர் அஸாமுடன் இணைந்து பஹர் ஸமான் 72 ரன்கள் சேர்த்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக், ஸ்கோர் 247 ஆக இருந்த போது ஷோயிப் மாலிக் (12), புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஷோயிப் மாலிக் – பாபர் அஸாம் ஜோடி 47 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முகமது ஹபீஸ் களமிறங்கினார். 40 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 41-வது ஓவரில் ஹபீஸ் 2 பவுண்டரிகள் அடித்தார்.

நிதானமாக பேட் செய்த பாபர் அஸாம் 52 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கேதார் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

முகமது ஹபீஸ் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், இமாத் வாசிம் 21 பந்துகளில் 25 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 339 ரன்கள் இலக்குடன் இந்தியா பேட் செய்தது. இந்திய அணி தொடக்கத்திலே சரிவை கண்டது. முகமது அமிர் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9 பந்தில் 5 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் முகமது அமிர் வீசிய 3-வது ஓவரில் பாயின்ட் திசையில் நின்ற ஷதப் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து யுவராஜ் களமிறங்கினார்.22 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவண், சர்ப்ராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் யுவராஜ் சிங்குடன், தோனி இணைந்தார்.

யுவராஜ் சிங் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷதப் கான் பந்திலும், தோனி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்திலும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து கடும் பின்னடைவை சந்தித்தது. அடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது.

எனினும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி நம்பிக்கையை ஏற்படுத்தினார். அவர் 43 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் ஜடேஜா செய்த தவறால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது ஸ்கோர் 26.3 ஓவர்களில் 152 ஆக இருந்தது.

சிறிது நேரத்தில் ஜடேஜா 15 ரன் களில் ஜூனைத் கான் பந்தில் ஆட்ட மிழந்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 1, பும்ரா 1 ரன்களில் வெளியேற இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top