டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய காலகட்டமான ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவமழை கடந்த சில ஆண்டுகளாக கை கொடுப்பது இல்லை. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தீவிரம் அடையும். ஆனால் இந்த ஆண்டு கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இதுவரை பருவமழை தீவிரம் அடையவில்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 22.78 அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறை, மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய காலகட்டமான ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தபட்சம் 80 அடிக்கு மேல் இருக்கும். இந்த நிலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. தற்போதுள்ள நீர் இருப்பு பாசனத்திற்கு கை கொடுக்காவிட்டாலும், குடிநீர் தேவையையாவது முற்றிலுமாக பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஏனெனில் கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் அணைக்கு வினாடிக்கு 100 கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மேலும் குறைந்து நேற்று வினாடிக்கு 95 கனஅடியாக வந்தது. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் நிலையில் பருவமழை வருவதற்கான அறிகுறிகள் இல்லை. இதனால் இந்த ஆண்டு பாசனத்தேவைக்காக மேட்டூர் அணை திறக்க வாய்ப்பே இல்லை என்ற சூழலே தொடர்ந்து நிலவுகிறது. பாசனத்தேவையை பூர்த்தி செய்யாவிட்டாலும் குடிநீருக்காவது தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுப்பணித்துறையினரும் வருணபகவானை வேண்டி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top