இங்கிலாந்தில் தெரசா மேவுக்கு பின்னடைவு;தொங்கு பாராளுமன்றம் அமையும்

 

தெரசா

 

 

இங்கிலாந்து ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு எடுத்து விட்டது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தனது பெரும்பான்மை பலத்தை அதிகரித்துக்கொள்ள பிரதமர் தெரசா மே விரும்பினார். இதற்காக பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு திடீர் தேர்தல் அறிவித்தார்.

நேற்று முன்தினம் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பினின் தொழிற்கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

மொத்தம் உள்ள 650 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

650 தொகுதிகளில் 647 தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பலம் பெறவில்லை. எனவே தொங்கு பாராளுமன்றம் அமைகிறது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இந்தக் கட்சிக்கு 316 இடங்கள் கிடைத்தன. தனிப்பெரும்பான்மை பலம் பெறுவதற்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகிறது.

இந்த தேர்தலில் தனது பெரும்பான்மை பலத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்று கருதி, தெரசா மேற்கொண்ட திடீர் தேர்தல் என்னும் அக்னி பரீட்சையில் அவர் தோற்று விட்டார். இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பின் வலியுறுத்தினார். ஆனால் தனது கட்சி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் என்று தெரசா மே குறிப்பிட்டார். அவர் தனிப்பெரும்பான்மை பலம் பெறாத நிலையிலும் பதவி விலக திட்டமிடவில்லை.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் – 650

முடிவு தெரிந்தவை – 647

கன்சர்வேடிவ் கட்சி – 316

தொழிற்கட்சி – 261

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி – 35

லிபரல் ஜனநாயக கட்சி – 12

ஜனநாயக யூனியனிஸ்ட்

கட்சி – 10

மற்றவர்கள் – 13

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு 42 சதவீதம் ஓட்டுகளும், தொழிற்கட்சிக்கு 40 சதவீதம் ஓட்டுகளும் கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

தெரசா மே கூட்டணி அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த தேர்தலில் முதல் முறையாக பெண் சீக்கியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தொழிற்கட்சி வேட்பாளர் பிரீத் கவுர் கில் ஆவார். அவர் பர்மிங்காம் எட்க்பாஸ்டன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று டான்மான்ஜித் சிங் தேசி, தொழிற்கட்சி சார்பில் ஸ்லோ தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பிரித்தி பட்டேல் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த டோரிஸ் ரிஷி சுனாக், சுயல்லா பெர்னாண்டஸ், கீத் வாஸ், இவரது சகோதரி வலேரி வாஸ், லிசா நந்தி, சீமாமல்கோத்ரா, வீரேந்திர சர்மா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top