அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது:ஸ்டாலின் கண்டனம்

 

stalin

 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி துவக்க விழாவில் பங்கேற்கப் புறப்பட்ட அந்த தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோரை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ள அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.மேலும்,

தமிழக அரசு விழாவை, ஏதோ அ.தி.மு.க. விழா என்றும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஏதோ அ.தி.மு.க. தலைமைக் கழக நிதியில் இருந்து செலவு செய்து திறப்பது போலவும் நினைத்துக் கொண்டு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் புது அரசியல் அநாகரிகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், பொதுமக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்திருப்பது, அவர்களுக்கு வாக்களித்து, தேர்வு செய்த பொதுமக்களை கைது செய்வது போன்ற செயல் என்பதை முதல்-அமைச்சர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் நான் துணை முதல்வராக இருந்தபோது, தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், ‘புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. தலைவர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்த மருத்துவக் கல்லூரியை அப்படியே கிடப்பில் போட்ட அ.தி.மு.க. அரசு, மீண்டும் “புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்” என்று 25-8-2015 அன்று ஒரு புதிய அறிவிப்பு போல, 110 விதியின் கீழ் வெளியிட்டது.

அப்போதே, தலைவர் கருணாநிதி, ‘இது தி.மு.க. ஆட்சியின்போதே அறிவிக்கப்பட்ட கல்லூரி’ என்று அறிக்கை விடுத்ததை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவக் கல்லூரியின் துவக்கவிழாவில் பங்கேற்றால், தலைவர் கருணாநிதியால் இந்த கல்லூரி வந்தது என்று பாராட்டி விடுவார்கள் என்ற பயத்திலும், இந்த கல்லூரி கட்டும் ஒப்பந்தம் எடுத்த காண்டிராக்டர் சுப்பிரமணியத்தின் தற்கொலை விவகாரம் குறித்து பேசி விடுவார்கள் என்ற அச்சத்திலும், இப்படியொரு அடக்குமுறையை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையை வைத்து, கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க. அரசின் இந்த முறையற்ற நடவடிக்கையை கண்டித்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, புதுக்கோட்டை நகரத்தில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரியை உடனடியாக அங்கிருந்து பணியிட மாறுதல் செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில், அரசு விழாக்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இருந்தும், அந்த விழாக்களில் கலந்துகொள்ள விடாமல் தடுக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top