மாட்டிறைச்சி விவகாரம்- மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மனு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

court

 

 

மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படை யில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்பு சட்டத் திருத்தங்களின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மே 26-ம் தேதி கால்நடைகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி நாடு முழுவதும் சந்தைகளில் பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், மேகாலயா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டுக்கறியை சமைத்து உண்ணும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளது.

இந்த விஷயத்தை முன்னிறுத்தி மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அனைவரையும் சைவத்துக்கு மாறச் சொல்கிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘நானும் அசைவம் உண்பவன்தான்’ என்றார். ‘என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பொதுமக்களின் விருப்பத்துக்கு உட்பட்டது’ என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மாட்டிறைச்சி உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநலன் வழக்கில், மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகமது அப்துல் பக்கீம் குரேஷி என்பவர் சார்பாக, நீதிபதிகள் அசோக் பூஷன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு, வழக்கறிஞர் சனோபார் அலி குரேஷி நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவு மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தனிமனிதனின் உணவு விஷயம், மத சுதந்திரத்தில் குறிப்பாக விலங்குகளைப் பலியிடும் சடங்கை மீறுவதாக இருக்கிறது. மதச் சடங்கு பலிக்காக விலங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசின் உத்தரவு இருப்பதாகவும், இது சுதந்திரமான வர்த்தக உரிமையை மீறுவதாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top