சுதந்திரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

 

 

 

ar ke

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் | கோப்புப்படம்: க.ஸ்ரீபரத்

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டதும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது.

தமிழக முதல்வராகவும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமாக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகள் படி, காலியாக இருக்கும் தொகு திக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர் பொறுப்பேற்க வேண்டும்.

அதன்படி, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்திருந்தது. இந்நிலையில், பணப் பட்டுவாடா புகார் உள்ளிட்ட பல காரணங்களால் வாக்குப்பதிவுக்கு 2 நாள் முன்னதாக இடைத்தேர்தலை ரத்து செய்து ஆணையம் உத்தரவிட்டது.

ஒரு தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படாவிட்டால் அதற்கான காரணங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ஜெயலலிதா மறைந்து ஜூன் 5-ம் தேதியுடன் 6 மாதங்கள் முடிந்துள்ளன. எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய முடியாததன் காரணத்தை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி சான்றிதழ் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெயலலிதாவின் மரணத்தால் காலியிடம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடத்த அறிவிக்கை வெளியிடப்பட் டது. ஆனால், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு உகந்த சூழல் ஏற்படாததால், 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியவில்லை.

நேர்மையாக தேர்தலை நடத்து வதற்கான சூழல் வரும்வரை இடைத்தேர்தலை தள்ளிவைக்கு மாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மே 30-ம் தேதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 151-ஏ பிரிவின்படி தேர்தலை தற்போது நடத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் சமூக நீதி அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ஆர்.கே. நகரில் உரிய காலத்துக்குள் தேர் தலை நடத்த முடியவில்லை என சான்றளிக்கப்படுகிறது. மேலும், அந்தத் தொகுதியில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கான உகந்தசூழல் ஏற்பட்டதும் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top