மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்து தமிழகம் முழுவதும் 15-ம் தேதி போராட்ட அறிவிப்பு

 

m,aatru thiranaali

 

 

மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி மசோதாவை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இம்மசோ தாவில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனிதாபிமான மற்ற இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களுக்கு 18 சதவீதமும், பிரெயில் கடிகாரங்கள், பிரெயில் காகிதங்கள், காதொலி கருவிகள் உள்ளிட்டவைகளுக்கு 12 சதவீதமும், ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள், மறுவாழ்வுக்கான உபகரணங்களுக்கு 5 சதவீதமும் வரி விதிக்க சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மீது பொருளாதார தாக்குதல் தொடுக்கும் மத்திய அரசின் இந்நடவடிக்கையை கேரளம், திரிபுரா உள்ளிட்ட மாநில அரசுகள் கண்டித்துள்ளன. ஆனால், தமிழக அரசின் தொடர் மவுனம் மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றம் அடையச் செய்கிறது. எனவே, தமிழக முதல்வர் காலம் தாழ்த்தாது தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவிப்பதோடு, மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க முன்வர வேண்டும் என எமது சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top